தேசிய புலனாய்வு இயக்குநர் பதவியிலிருந்து சுரேஸ் சாலேயை உடன் பதவிநீக்கவேண்டும்! விஜித ஹேரத் வலியுறுத்து

தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் சுரேஸ் சாலேயை உடனடியாக பதவி நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானிற்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே தேசிய மக்கள் சக்தி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

செய்தியாளர் மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநராக சுரேஸ் சாலே தொடர்ந்தும் பணியாற்றும் சந்தர்ப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சனல் 4 வீடியோவில் மௌலானா தெரிவித்துள்ளது போல உயிர்த்த ஞாயிறு தாக்குகுதலில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர்  பிள்ளையானிற்கும் சுரேஸ் சாலேயிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது அவர்கள் கோட்டாபயவுடன் காணப்படும் படங்கள் உள்ளன, பிள்ளையானுக்கு உள்ள தொடர்பை மௌலானவே வெளிப்படுத்தியுள்ளார்,எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

உண்மையான குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்  விசாரணைகள் உரிய கோணத்தில் இடம்பெறவில்லை,தற்போது வெளிவந்துள்ள விடயங்கள் சூத்திரதாரிகள்  மற்றும் நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளன எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்ற உடன் சுரேஸ் சாலே புலனாய்வு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதற்கும் உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கும் தொடர்பிருக்கவேண்டும் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஜனாதிபதி அல்லர். அவருக்கு விடுபாட்டுரிமை இல்லை என்பதால் அவர் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்