செல்வம் எம்.பிக்கு கிடைத்தது பிணை!

சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி புதன்கிழமை மதியம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான பேரணியில் பங்களித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கு கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

அழைக்கப்பட்ட போது நீதிமன்றில் பிரசன்னமாகாமைக்காக செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிரேஷ்ட சட்டத்தரணி என். சிறிகாந்த ஊடாக மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மன்று ஆட்பிணையில் செல்வதற்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு அனுமதித்திருந்தது.  இவ்வழக்கில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் யாழ்.மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் பிணை ஒப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.