அசாத் முஸ்லிம் சமூகத்தின் முதல் துரோகி: கடுமையாக தண்டிக்கப்படவேண்டிய ஒருவர்! முஷாரப் கடும் விசனம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறவுள்ளது என்பதை அறிந்தவுடன் அசாத் மௌலானா எமது சமூகத்திடம் குறிப்பிட்டிருக்கலாம், எமது சமூகத்தை காவு கொடுக்க போகிறார்கள்.
அதை தடுங்கள் என்று ஜம்யத்துல் உலமா சபையிடம் குறிப்பிட்டிருக்கலாம். அல்லது சம்பவம் இடம்பெற்ற மறு கணமேனும் உண்மையை பகிரங்கப்படுத்தியிருக்கலாம். எதனையும் அவர் செய்யவில்லை. ஆகவே அசாத் மௌலானா இந்த நாட்டினதும்,முஸ்லிம் சமூகத்தினதும் முதல் துரோகி. அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என  ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.முஷாரப் சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை தொடர்ந்து அன்ஷித் அசாத் மௌலானா தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை நாட்டு பற்றுடன் வாழ்கிறார்கள். இரண்டாம் இராஜசிங்க மன்னனை பிரித்தானிய படையினர் துரத்திச் சென்ற போது அவரை பாதுகாக்க ஒரு முஸ்லிம் பெண்மணி தனது உயிரை துறந்த வரலாற்று சம்பங்களும் உள்ளன.

வரலாற்றுக் காலம் முதல் முஸ்லிம் சமூகத்தினர் அரசுக்கும், நாட்டுக்கும் பற்றாளர்களாக வாழ்ந்துள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தினர் சொல்லெனாத் துயரத்தை எதிர்க்கொண்டார்கள்.

இந்த நிலையை ஏற்படுத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சனல் 4 காணொளி ஊடாக அசாத் மௌலானா என்பவர் பேசிக்கொண்டிருக்கிறார். ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் அசாத் மௌலானா ஒரு கூலியாளராக செயற்படுகிறார் என்று குறிப்பிடுவது பிறிதொரு விடயம். ஆனால் குறிப்பிடும் விடயம் உண்மையாயின் இந்த நாட்டினதும்,முஸ்லிம் சமூகத்தினதும் முதல் துரோகி அசாத் மௌலானா என்பதை உயரிய சபையில் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பம் இடம்பெறவுள்ளது என்பதை அறிந்தவுடன் அசாத் மௌலான எமது சமூகத்திடம் குறிப்பிட்டிருக்கலாம்,எமது சமூகத்தை காவு கொடுக்க போகிறார்கள்.
இதனை தடுங்கள் என்று ஜம்யத்துல் உலமா  சபையிடம் குறிப்பிட்டிருக்கலாம்.அல்லது சம்பவம் இடம்பெற்ற மறுகணமேனும் உண்மையை பகிரங்கப்படுத்தியிருக்கலாம்.

அசாத் மௌலானா அன்று ஒரு கைக்கூலியாக செயற்பட்டமையைப் போன்று இன்றும் ஒரு தரப்பினரின் கைகூலியாகவும், முகவராகவும் செயற்படுகிறார்.

ஆகவே அசாத் மௌலானாவை எமது சமூகத்தின் சார்பில் கடுமையாக தண்டிக்க ஆசைப்படுகிறேன். அசாத் மௌலானாவை ஒரு கருவியாக கொண்டு ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்