வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களத்துக்கூடாக பௌத்த மயமாக்கலை இராணுவமே செய்து வருகின்றது அருட்தந்தை மா.சக்திவேல் காட்டம்

வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

சமய தலைமைகள் தமது சமய உண்மையில் நின்று சமய அமைப்புக்கள் தந்துள்ள அதிகாரத்தையும், சமூக கௌரவத்தையும், பயன்படுத்தி சமூக  நல்லிணக்கம் சமயங்களுக்கிடையிலான நல்லுறவு என்பவற்றை வளர்க்கவும், கட்சி அரசியலைக் கடந்து சமூக நீதிக்காக குரல் எழுப்பி சமூக சமத்துவத்துக்கு உழைக்க வேண்டும்.

அதனின்று விலகி அதிகார அரசியலுக்கு சாமரை வீசுவதும் இன முரண்பாட்டை  ஏற்படுத்துவதோடு சமூகத்துக்கு  பேரழிவையே தருவிக்கும்.

அத்தோடு சமய தத்துவங்களையும் கொள்கைகளையும் அது அசிங்கப்படுத்துவதோடு இளம் தலைமுறை சமயத்தில் இருந்து விலக்கி அவர்களை அழிவிற்கே விட்டு செல்லும் அபாயமும் உள்ளது.

சில சிங்கள பௌத்த தலைமைகளின் ஆசியோடு வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்வதோடு இராணுவத்தின் துணையோடும் துணை இன்றியும் சிங்கள பௌத்த துறவிகளும் அதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களையும் அரச துணை இராணுவ  பிரிவாகவே அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.

இதற்கு பின்னால் சிங்கள பௌத்த அரசியல் சதியே வடக்கு கிழக்கில் நிறைவேறி வருகின்றது. இதன் நோக்கம் சிங்கள பௌத்த மயமாக்கலோடு தமிழ் மக்கள் மீது அடக்கு முறையை பிரயோகித்து அவர்களை கொதிநிலையில் வைப்பதுமாகும். தேவை ஏற்படின் மோதலுக்கு வழிவகுப்பதுமாகும். இதனை அனைவரும் வன்மையாக கண்டிப்பதோடு அதற்கு தொடர்ந்து இடம் அளிக்கக்கூடாது.

அதேபோன்று வேறு சமய மையங்கள், சமய தலைமைத்துவங்களின் இனத்துவ, மத துவேச  கருத்துக்களுக்கும், கட்சி அரசியலுக்கும் இடம் அளிப்பதை அங்கீகரிக்க முடியாது.

அண்மையில் கொழும்பு கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இந்தியா தொடர்பாகவும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தரைவழிப் பாதை தொடர்பாகவும் அவர் வெளியிட்ட கருத்து அவர் தமது கடந்த கால அரசியலுக்குள் இருந்து மீளவில்லை என்பதையே உணர்த்துகின்றது.

கடந்த காலங்களில் ராஜபக்ஷ அரசியலை பாதுகாத்தவர். அவர்களை மீளவும் அதிகாரத்துக்குக் கொண்டுவரத் துடித்தவர். தற்போது வேறு அரசியல்  தளத்திற்கு தாவி அதனை பலப்படுத்தவும் அவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவர முயல்வதாகவுமே தோன்றுகின்றது.

கர்த்தினாலின் கருத்து இந்திய எதிர்ப்பு வாதத்தோடு சிங்கள பொது இனவாதிகளுக்கு தீனி போட்டுள்ளதோடு வரலாற்று பிறழ்வையும் கொண்டுள்ளது எனலாம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தலைவழி பாதை அமைக்கும் முன்மொழிவை எதிர்க்கும் கர்தினால் அதற்கு தெற்கு  மக்களின் விருப்பை கேட்க வேண்டும் என கூறுகின்றார்.

ஆனால் சீனா, இலங்கையின்  சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி தனித்தீவை அமைத்து இருப்பதையோ, அம்பாந்தோட்டை துறைமுகத்தை தம் வசமாக்கத் துடிப்பதையோ, தமது இராணுவ ஆய்வு கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் என்பவற்றை இலங்கைக்கு அனுப்புவதையோ, இலங்கை கடலில் நங்கூரமிடுவதையோ எதிர்க்கவில்லை ஏன்? இதற்கெல்லாம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் அபிப்பிராயத்தை அறியுமாறு கேட்கவில்லையே ஏன்?

அதுமட்டுமல்ல வடக்கில் தொடர்ந்து மற்றும் தொடரும் இன அழிப்பு இனப்படுகொலை கணாமலாக்கப்பட்டோர் கத்தோலிக்க அர்த்தம் தெரியாது காணாமலாக்கப்பட்டவை. நவாலி தேவாலயத்தின் மீது வான் படையினர் குண்டு தாக்குதல் நடத்தி அப்பாவிகள் கொல்லப்பட்டபோது வாயை திறக்கவில்லை. அவையெல்லாம் வடகிழக்கின் மறை மாவட்டங்களில் நடந்தன என அமைதி காத்து அங்கீகாரமும் அளித்தார்.

தற்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாலம் அமைக்க உத்தேசித்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை.

ஆனால் 36 வருடங்களுக்கு முன்னர் இந்தியா வடக்கில் உணவு பொட்டலங்களை போட்ட நிகழ்வை நினைவுபடுத்தி பாரிய ஆபத்து என கொக்கரித்து சிங்கள பேரினவாதத்தை தூங்கா நிலைக்கு தள்ளியுள்ளார்.

இது அவரது தனிப்பட்ட அரசியல் லாப நோக்கு கருத்தாகும். தான் விரும்பும் அரசியல் சக்தியை அடுத்த தேர்தலில் பதவியில் அமர்த்துவதற்கான நச்சுக் கருத்து என்றே இதனைக் கூற வேண்டும்.

சமய தலைமைகள் எப்போதும் ஒடுக்கப்படும் மக்கள் சார்பெடுத்து, அவர்களின் குரலாக நின்று, அவர்களின் அவலம் போக்கி நீதியை நிலை நாட்ட முன் நிற்க வேண்டும். அதுவே விடுதலை சமய கருத்தியல். இதற்கு வாழ்வு கொடுப்பதே சமய கௌரவம்.

சமய தலைமைத்துவங்கள் தமது அடிப்படை வாதத்தினின்றும், குறுகிய  அரசியல் வாதத்திலிருந்தும் விடுபட்டால் மட்டுமே நாட்டிற்கு எதிர்காலம் உண்டு. – என்றுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.