திரிபோலி குழு தொடர்பாகச் செய்தி வெளியிட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு பிள்ளையான் அச்சுறுத்தல்! சாணக்கியன் குற்றச்சாட்டு

திரிபோலி குழு தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த குழுவால் எனக்கும் ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் காணப்படுகிறது.நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெளிவற்ற வகையில் எம்மீது குற்றஞ்சாட்டுகிறார்.

எம்மை விமர்சிப்பதை விடுத்து வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து விசாரணை செய்யுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பொதுஜன பெரமுனவினர் தங்களின் ஆளணி பலத்துடன் தோற்கடிப்பார்கள். ஆனால் மக்கள் மத்தியில் செல்லும் போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அப்பாற்பட்ட வகையில் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பதை பொதுஜன பெரமுனவினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிரத்தியேக மருத்துவ உபகரணத்தை முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி களுத்துறை மாவட்டத்துக்கு வழங்கினார். இந்த முறையற்ற செயற்பாட்டின் சாபத்தால் அவர் அமைச்சு பதவியில் நீண்டகாலம் இருக்கவில்லை. நெருக்கடியான சூழ்நிலையில் பதவி விலகினார். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மீண்டும் அந்த மருத்துவ உபகரணத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள போது அதை பதுளை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.இந்த முறையற்ற செயற்பாட்டின் சாபமும் விட்டு வைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சனல் 4 காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மையே. குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயாமல் தகவல்களை வெளிக்கொண்டுவரும் நபர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நான் ஆற்றிய உரை தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.நான் எவற்றை குறிப்பிட்டேன் என்பதை அறியாமல் அவர் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.தலைக்கான தொப்பியின் அளவு சரியாயின் நீதியமைச்சர் தொப்பியை அணிந்து கொள்ளலாம்.

பிள்ளையான் சிறையில் இருக்கும் போது அவரை விடுதலை  முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி மாதவ தென்னகோன் ஆகியோர் இணக்கம் தெரிவிக்கவில்லை என்பதையே  நான் குறிப்பிட்டேன்.அத்துடன் பிள்ளையானின் விடுதலை தொடர்பில் வெளியாகியுள்ள குரல் பதிவுகள் தொடர்பில்  சபைக்கு  எடுத்துரைத்தேனே தவிர  நீதிமன்ற கட்டமைப்பை விமர்சிக்கவில்லை.ஆகவே நீதியமைச்சர் தெளிவுடன் செயற்பட வேண்டும்.

திரிபோலி என்ற கொலை  குழு 2015 ஆம் ஆண்டு முதல் இயங்குகிறது.மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு இல்லாமல் இருந்த பிள்ளையானை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்காகவே  உயித்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. பிள்ளையான் தலைமையில் திரிபோலி குழு செயற்படுகிறது.

திரிபோலி குழுவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பலர் சாட்சியமளித்து பல விடயங்களை எடுத்துரைத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் நட்டில் பல பகுதிகளில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.திரிபோலி குழுவுக்கும்,இந்த முரண்பாடுகளுக்கும்  இடையில் தொடர்புண்டு.

லசந்தவிக்கிரமதுங்க,ஹக்னெலிகொட,கீத்னொயார்,தம்பையா,ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை  குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.திரிபோலி தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களான சஷிந்திரன் புண்ணியமூர்த்தி,நிஷாந்தன்,கிருஷாந்தன் ஆகியோர் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

திரிபோலி குழு ஊடாக எனக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் காணப்படுகிறது.கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு கொழும்பில் ஒரு தரப்பினர் என்னை  பின்தொடர்ந்தார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில்  தற்போது வெளியாகியுள்ள பல விடயங்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அமைதி காப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.