இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் எவையும் வெற்றிபெறவில்லை! உண்மையை எடுத்துக்கூறினார் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை எனவும் சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சனல் 4 காணொளி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை முற்று முழுவதுமாக எம்மால் நிராகரித்துவிட முடியாது.

இருப்பினும் இந்த காணொளியை நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என கூறவும் முடியாது. எனினும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீனமான, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவே சிறந்தது. விசாரணை நடத்துமாறும், உண்மையை வெளிக்கொண்டுவருமாறும் இங்குள்ளவர்களுக்கு கூறினாலும் அது சரிவராது.

மேலும் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை.

இதனை என்னால் அடித்துக் கூறலாம். விசாரணைகள் வெற்றியடையவில்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் சனல் 4 காணொளி தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு கூறியுள்ளது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை கூறுவது போன்று சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டால் சிறந்தது என நான் நினைக்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்