அரசை வீழ்த்துவதற்காக நாட்டை காட்டிகொடோம்! உதய கம்மன்பில திட்டவட்டம்

அரசாங்கத்தை வீழ்த்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆனால் அதற்காக சர்வதேச மட்டத்தில் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்று குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுறு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை  வருமாறு –

எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தையும் ராஜபக்ஷர்களையும் கடுமையாக எதிர்ப்போம். ஆனால் சர்வதேச மட்டத்தில் நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் நிலையில் சிங்கள அரச தலைவரை ஆட்சிக்கு கொண்டு வர குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சனல் 4 குறிப்பிடுகிறது.

புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் பேச்சில் ஈடுபட்டார் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகளுடன் சலே பேச்சில் ஈடுபட்டார் எனக் குறிப்பிடப்படும் காலத்தில் தான் நாட்டில் இருக்கவில்லை என சுரேஷ் சலே குறிப்பிடுகிறார். ஆகவே சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்துக்கும், சுரேஷ் சலே குறிப்பிடும் விடயம் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை முதலில் முன்னெடுக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி காலத்துக்கு காலம் மாற்றமடைகிறார். ஆரம்பத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இரண்டாவது அமெரிக்கா, மூன்றாவதாக மைத்திரிபால சிறிசேன, நான்காவதாக கோட்டாபய ராஜபக்ஷ என முக்கிய சூத்திரதாரிகள் இவர்கள் தான் என்று பெயர் குறிப்பிடப்பட்டது. தற்போது புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அதனை பாதகாப்பு தரப்புக்கு அறிவிக்க வேண்டும். அதை விடுத்து ஊடகங்களிடம் குறிப்பிடுகின்றமை பயனற்றது. அரசாங்கத்தை வீழ்த்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆனால் அதற்காக நாட்டுக்கு எதிராக செயற்படமாட்டோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.