ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மலையகத்துக்கு பயணம்! அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி  மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸ், மலையகத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி, அமைச்சர் ஜீவன் தொண்டமானை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவானில் வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இ.தொ.காவின் சர்வதேச விவகார பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், மலையகத்; தமிழர்களின் வரலாறு, அவர்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுப்பதற்காக இ.தொ.கா. முன்னெடுத்த போராட்டங்கள், மலையகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

காப்புறுதி, காணி உரிமை உட்பட ஜீவன் தொண்டமான் வகிக்கும் அமைச்சின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும், அதற்கு ஐ.நா. மற்றும் அதன் கீழ் இயங்கும் கிளை அலுவலகங்களின் உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது சம்பந்தமாகவும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சரின் அழைப்பையேற்று நுவரெலியா மாவட்டம் உட்பட மலையகப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு ஐ.நா. வதிவிட பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்