தமிழர் விடயத்தில் முதல்நிலை நடுநிலையாளராக இந்தியா செயற்பட வேண்டும் என்கிறார் சிறீதரன்!

ஈழத் தமிழர் விடயத்தில் முதல்நிலை நடுநிலையாளராக இந்தியா செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு  வெள்ளிக்கிழமை காலை அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள அக்கிராச மன்னன் சுற்றுவட்டத்தில், கரைச்சிப்  பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன்  தலைமையில் நடைபெற்றது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனைத்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் திலீபனால் முன்வைக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளும் இன்றுவரையும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக முன்வைக்கப்பட்ட சாதாரண கோரிக்கைகள்கூட 36 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றப்படாத நிலையே இந்தநாட்டில் இன்னமும் தொடர்கிறது.

ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால இனப்பிரச்சினை தொடர்பில் அன்னை இந்திராகாந்தி கொண்டிருந்த கரிசனை பின்வந்த நாள்களில் கூருணர்வு அற்ற சில ராஜதந்திரிகளின் செயல்களால் இந்திய வகிபாகத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே முள்ளிவாய்க்கால் வரையிலான மிகமோசமான இனப்படுகொலை வரையும் ரத்தமும் சதையுமாக எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் நடைபெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அன்றே சரியான திசையில் சிந்தித்து இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஈழதேசம் அவசியமென இந்திய கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்திருந்தால் இன்று சீன தேசத்தால் ஏற்படுகின்ற நெருக்கடிகளின் விளைவுகள் அதே சிந்தனைப் போக்கை கிளர்த்தியிருக்கும் தேவைப்பாடு எழுந்திருக்காது.

எப்பொழுதும் இந்தியாவே எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதும், இந்தியாவின் கேந்திர நலனைப் பாதுகாக்க வேண்டியது ஈழத்தமிழர் தேசமே என்பதும் ஏற்கனவே உணரப்பட்ட உண்மை. எனவே ஒருவருக்கொருவர் இணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில் இன்று இந்தியாவும் ஈழதேசமும் இருக்கிறது.

அத்தகைய காலச்சூழல்களைக் கருதி, இந்தியா ஈழத் தமிழர் விடயத்தில் 36 ஆண்டுகளுக்கு முன்விட்ட தவறுகளைப் புரிந்து கொண்டு ஈழ தேசத்தைப் பாதுகாக்கவும் அதனூடாக தென்கோடியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு நட்புமிக்க சக்தியாக ஈழத் தமிழரது தாயகத்தை உருவாக்கவும் தயாராக வேண்டும். அதற்கான முதல் நிலை நடுநிலையாளராக இந்தியா தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.