கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்குச் சாட்சியம்! மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டு

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, இங்கு தமிழ் மக்கள் மீது இன அழிப்பு இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது.

ஆகவே இந்த மனிதப் புதைகுழியை ஆய்வுசெய்பவர்கள் நேர்மையாகவும், விஞ்ஞான ரீதியிலும் எந்தவித குறுக்கீடுகளுக்கும், தலையீடுகளுக்கும் இடமளிக்காது, பகிரங்கமாக உண்மைகள் வெளிப்படக்கூடியவகையில் ஆய்வுசெய்யப்படவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு மாவை சேனாதிராஜா, விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார், குறித்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

தமிழினத்தின் விடுதலைக்காக இடம்பெற்ற போராட்டத்தில், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கானவர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கான ஒரு சாட்சியாகவே கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகின்றது.

இவ்வாறு எமது தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதற்கான ஒரு சாட்சியம் கண்டுபிடிக்கப்பட்டமையால் அகழ்வாய்வுகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன. எலும்புக்கூடுகள், ஆடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை சாட்சியங்களாகப் பெறப்படுகின்றன.

இந் நிலையிலே எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு நாம் எமது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்தவேண்டும்.

இதுபோன்ற மனிதப் புதைகுழிகள் தமிழர்களுடைய தேசத்தில் இன்னும் எங்கெங்கு இருக்கின்றது என்பதை நாம் அறியோம். இது ஒரு முக்கியமான அடையாளம்.

இதைப்போல இன்னும் பலநூற்றுக்கணக்கான இடங்களில் போர்க்காலத்திலும், இறுதிப்போர் காலத்திலும் தமிழ் மக்கள் கூட்டங்கூட்டமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இதனுடைய வெளிப்பாடாகத் தெரிகின்றது.

இந் நிலையில் இந்த மனிதப்புதைகுழி ஆய்வுகள் விஞ்ஞானபூர்வமாக இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அகழ்வாய்வுகளுக்குத் தகுந்தவர்கள் இந்த எலும்புக்கூடுகளையும், தடையப்பொருள்களையும் ஆராய்ந்து பார்த்துப் பதில் சொல்லவேண்டும்.

அரசாங்கமும், ஜனாதிபதியும் இந்தவிடயம் தொடர்பில், சர்வதேச விசாரணைகள் நடத்துவதற்கு ஆயத்தம் என்று சொல்கின்ற நிலையை தற்போது காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறு இந்த மனிதப் புதைகுழிகள் சாட்சியங்களாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன.

போரின் இறுதியில் போராளிகள் உட்பட, பொதுமக்கள் பலர் சரணடைந்துள்ளனர்.

போரின் இறுதிப் பகுதியிலே பாதுகாப்பான இடங்களுக்கு வாருங்களென அரசு, இராணுவத்தினர் அழைப்புவிடுத்திருந்தனர்.

அவ்வாறு பாதுகாப்பான இடங்களென அரசும், இராணுவமும் குறிப்பிட்ட இடங்களில் தமிழ் மக்கள் ஒன்றுகூடியிருந்தபோது இலங்கை அரசு விசக்குண்டுகள் வீசி மக்களைக் கொன்றது. எத்தனை ஆயிரம் பேர் அவ்வாறு கொல்லப்பட்டார்களென இன்னும் சரியாக இறுதி செய்யப்படவில்லை.

ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றிலே இந்திராகாந்தி அம்மையார் பேசும்போது, இலங்கையில் நடப்பது இனப்படுகொலை எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இப்போது இந்தப் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்படுபவை எல்லாம், எமது இனத்துக்கு இடம்பெற்றது இனப்படுகொலைதான், இங்கு இன அழிப்பு இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கு சாட்சியங்களாகவிருக்கின்றன.

ஆகவே இந்தப் புதைகுழியை ஆய்வுசெய்பவர்கள் நேர்மையாகவும், விஞ்ஞானரீதியிலும் எந்தவித குறுக்கீடுகளுக்கும், தலையீடுகளுக்கும் இடமளிக்காது, பகிரங்கமாக உண்மைகள் வெளிப்படக்கூடியவகையில் இவை ஆய்வுசெய்யப்படவேண்டும்.

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், தமிழர்களுக்கான விடுதலைக்காக இடம்பெற்ற போரில் இன அழிப்பு இடம்பெற்றதற்கு சாட்சியாக இந்த மனிதப் புதைகுழிகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழுதுகொண்டிருக்கின்றனர். போரிலே சரணடைந்தவர்கள் எங்கே எனத் தெரியாமலிருக்கின்றது.

இவ்வாறு இன அழிப்பிலிருந்து மீண்டு எஞ்சியிருந்து போராடிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு விடுதலைகிடைக்கவேண்டும் – என்றார்.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், விநோனோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள்  புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் உள்ளிட்டவர்களும் குறித்த இடத்திற்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்