இரு பஸ்கள் மோதி விபத்து : ஆசிரியர் ஒருவர் உட்பட மாணவர்கள் 21 பேர் காயம்

பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம்  இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஆசிரியர் ஒருவர் உட்பட மாணவர்கள்  21 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுக்க, துன்னான பிரதேசத்தில் நாரம்மலவிலிருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு  பயணித்துக் கொண்டிருந்த  பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த மற்றுமொரு பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பாதுக்க

பொலிஸார் தெரிவித்தனர். நாரம்மல, மயூரபாத மகா வித்தியாலய மாணவர்கள் குழுவொன்று ஹோமாகம, பிடிபன நனோ தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக 6 பஸ்களில் சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது  ஆசிரியர் ஒருவர் உட்பட 21 மாணவர்கள் காயமடைந்த நிலையில் பாதுக்க பிரதேச  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 18 மாணவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று கல்விச் சுற்றுலாவுக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இதேவேளை அவர்களில் மேலும் மூவர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலைக்கு

மாற்றப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பாதுக்க பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.