ராஜபக்ஷ யுகத்தை மீளகொண்டுவர முயற்சிக்கும் சிங்களக் காடையர்கள் சிவமோகன் சுட்டிக்காட்டு

தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய மக்கள் அஞ்சலி ஊர்தியையும், ஊர்தியோடு பயணித்தவர்களையும் தேசிய கொடி தாங்கிய சிங்கள காடையர்களால் மிருகத்தனமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளவை வருமாறு –

தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத வன்முறை அரசியலை இனவாதிகள் தொடர்ந்தும் செய்ய விரும்புகின்றார்கள் என்பதையே தாக்குதல் வெளிப்படுத்துவதோடு, மீண்டும் ராஜபக்ஷ யுகத்தை கொண்டுவரவே இந்த சிங்கள காடையர்கள் முயல்கின்றார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்நாட்டில் தமிழர்கள் அஹிம்சை வழியிலும் வாழ முடியாது என்பதை சர்வதேசமும் உணர்ந்திருக்கும் என நம்புகின்றோம்.

தாக்குதல் தொடர்பில் காட்சிகளின் பதிவு சமூக வலைத்தளங்களில் போதுமான சாட்சியாக இருக்கும் போது ஐவர் மட்டும் கைது செய்யப்பட்டமை ஏன்? திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தி பயணத்தை ஆரம்பத்திலிருந்து அரச புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக முன்னும் பின்னும் பயணித்ததை நாம் அறிவோம். எல்லா பொலிஸ் நிலையங்களுக்கும் இது தெரியும்.

அவ்வாறு இருக்கையில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என பொலிஸார் அறிந்திருந்தும் அதைத் தடுக்க முன் ஏற்பாடு செய்யாதது ஏன்? தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தமக்கே உரிய பாணியில் தடுக்க முயற்சிக்காதது ஏன்?

இந்தத் தாக்குதல் திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தின் கோரம் என்பதே உண்மை. தமிழர்களுக்கு எதிராக இனவாத நோக்கில் வரலாற்றில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெறுவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறே நீதிமன்றக் குற்றவாளிகளாக அடையாளம் கண்டாலும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெளியில் வந்து விடுவார்கள். இது கடந்த கால எமது அனுபவம்.

திலீபன் உணர்வாளர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர கொலை வெறி தாக்குதல் தமிழ் மக்களின் உள்ளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்திய சிங்களக் காடையர்கள் மீதும் அரசின் மீதும் அரசின் பாதுகாப்பு கட்டமைப்பின் மீதும் கோபம் கொண்டுள்ளனர்.

எனவே தமிழ் அரசியல் தலைவர்கள் யாருக்காகவும் அரசியல் செய்யாது தமிழர் தேசத்திற்காக, மக்கள் அரசியல் செய்ய திலீபன்  நினைவேந்தல் வாரத்தில் உறுதி கொள்வோம். அதனை நாட்டின் பேரினவாத அரசுக்கும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.