அமெ.சென்ற ஜனாதிபதியின் தூதுக்குழுவில் மஹிந்தானந்த, ரோஹித அபேகுணவர்தன! துஷாரா இந்துனில் கடும் சாடல்

விவசாயத்துறையை முழுமையாக சீரழித்த மஹிந்தானந்த அளுத்கமகே, கடல் வளத்தை அழித்த ரோஹித அபேகுவர்தன ஆகியோர் ஜனாதிபதியின் நியூயோர்க் விஜயத்தின் சிறப்பு தூதுக்குழுவினராகச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. ஆளும் தரப்பில் சிறந்தவர்களை புறக்கணித்து கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவர்களை இணைத்துக்கொள்வது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

புதிய வன கொள்கைக்கமைய, பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் வன வளங்கள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி குறிப்பிடுகிறார்.

யானை – மனித மோதல் பிரச்சினை காலம் காலமாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரை நிலையான தீர்வு எட்டப்படவில்லை. யானைகளின் வாழிடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துள்ளதால் யானைகள் – மனிதர்கள் அண்டிய பகுதிக்குள் வாழ வேண்டிய நிலை காணப்படுகிறது.

வனவளங்கள் பாதுகாப்பு விடயத்தில் கிராம சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். ஆனால், புதிய வன கொள்கை கிராம சேவகர்களின் அதிகாரங்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே ஆற்றில் முட்டியை வீசி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை அமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் சிறப்புத் தூதுக் குழுவினர் சென்றுள்ளார்கள். விவசாயத்துறையை அழித்து நாட்டு மக்களின் போசனையை முழுமையாக இல்லாதொழித்த மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நியூ டைமன், எக்பிரஸ் பேர்ல் கப்பலை நாட்டுக்குள் அழைத்து கடல் வளத்தை அழித்த ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் வழக்குகளுக்கு முன்னிலையாகிய ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர் தொலவத்தே ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்புத் தூதுக்குழுவினராகச் சென்றுள்ளார்கள்.

ஆளும் தரப்பில் சிறந்தவர்கள் பலர் இருக்கும் போது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தூதுக்குழுவினராக இணைத்துக் கொண்டுள்ளமை முறையற்றது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்