கோழைத் தனமான அறிக்கையை கிழக்கு ஆளுநர் மீளப்பெறவேண்டும் வேலுகுமார் சபையில் கோரிக்கை

யுத்தத்தை சமாதானமாக முடிக்க வேண்டும் என போராடி உயிர்நீத்த திலீபனை நினைவு கூருகின்ற ஊர்வலத்துக்கு சென்ற செல்வராசா கஜேந்திரனின் செயற்பாட்டை கண்டித்து அறிக்கை விட்டிருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் அறிக்கை கோழைத்தனமானது, அதனை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

இன்று நாட்டில் இனவாதத்தை – இனமோதலை – தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்தத்தை சமாதானமாக முடிக்க வேண்டும் என போராடி உயிர்நீத்த திலீபனை நினைவு கூருகின்ற ஊர்வலத்துக்கு சென்ற இந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமாக தாக்கப்படுவதையும் அதனை பொலிஸார் பார்த்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது.

ஆகவே இன்று இனமோதலை ஏற்படுத்தும் சூட்சுமம் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற கிழக்கின் ஆளுநர், செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என கோழைத்தனமான அறிக்கையை விட்டிருக்கிறார்.

அஹிம்சாவாதியை நினைவு கூர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத முதுகெலும்பு இல்லாத அவர், முறையற்றது என கூறியிருக்கின்றமை கோழைத்தனமானது. அவர் தன்னுடைய அறிவிப்பை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் தற்போது நடைபெறும் அத்துமீறல்கள் சமூக ஊடகங்களின் மூலமாகவே மக்களுக்கு வெளிக்கொண்டு வரப்படுகின்றன.

செல்வராசா கஜேந்திரனின் தாக்குதலையும் அவ்வாறே நாம் அறிந்து கொண்டோம். இன்று இந்த அரசாங்கத்துக்கு சமூக ஊடகங்களின் மூலமாக வெளிக்கொணரப்படும் விடயங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவோ அதற்கு விடையளிக்கவோ முடியாத நிலையில் புதிய சட்டம் இயற்றி புதிய சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அடிமைப்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி செய்கிறது.

இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு. இந்த நாட்டிலுள்ள குடிமக்கள் தமது உரிமையைக் கேட்டால் அவர்களை பயங்கரவாதி என அடையாளப்படுத்தும் வேலைத்திட்டத்தை பயங்கரவாத சட்டத்தின் மூலம் ஏற்படுத்த அரசாங்கம் பார்க்கிறது.

அதேபோன்று ஜனநாயக அமைப்புக்கள், சமூக அமைப்புகள் யாவற்றையும் நாட்டின் ஜனாதிபதியின் மூலம் தடையுத்தரவுகளை கொண்டு வருவதற்கான அவகாசத்தையும் அந்த சட்டத்தின் மூலம் அரசாங்கம் கொண்டு வரப் பார்க்கிறது. இவற்றை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை கொண்டு வருவதற்கு இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகப்பெரியதொரு பொறுப்பு இருக்கின்றது. அவர் இந்த நாட்டின் பிரதமராக இருக்கின்ற போதே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. ஆகவே, அந்த சூத்திரதாரிகளை அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கின்றது.

ரணில் விக்ரமசிங்க இதனை செய்வாரா அல்லது ராஜபக்ஷவினரைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை செய்வாரா அல்லது அரசாங்கத்தைப் பாதுகாப்பாரா அல்லது இந்த நாடு, இனமோதலுக்குட்பட்டு எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலைமைக்கு தள்ளிவிடுவாரா என்ற  அவரின் வேலையை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆகவே சனல் 4 ஊடாக வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். அது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல அமைப்புக்கள் கோருகின்றன. உள்நாட்டு விசாரணையில் திருப்தியடைய முடியாது. ரணில் விக்ரமசிங்க விரும்பினாலும் இந்த அரசாங்கம் ஒருபோதும்  சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது  அந்த குற்றவாளிகளும் அந்த சூத்திரதாரிகளும் இந்த அரசாங்கத்தில் இருப்பதே அதற்குக் காரணமாகும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.