வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு தொடரும்! அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதி

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா எப்போதும் வழங்குமென அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் விக்டோரியா நூலண்ட் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு, கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்துகொண்டது.

அதன் ஓரங்கமாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவுக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் விக்டோரியா நூலண்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வார இறுதியில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்புத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் மற்றும் அதுசார்ந்த விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடியதாக அமைச்சர் அலி சப்ரி அவரது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விக்டோரியா நூலண்ட், வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும் என்றும், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையிலும் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின்போது அமெரிக்காவின் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்கள், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரமான இந்திய-பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய இருநாடுகளினதும் கடப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்