தவறான அறிக்கைமூலம் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றார் இம்ரான் மக்ரூப் எம்.பி.! முன்னாள் தவிசாளர் முபாரக் சாட்டை

 

அபு அலா –

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும், கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு செயலகங்களிலும் முஸ்லிம்களுக்கான பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இது முற்றிலும் பொய்யாகும் என்று குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.முபாரக் தெரிவித்தார்.

இதுதொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

முஸ்லிம்களுக்கான உயர்பதவிகளை ஆளுநரால் வழங்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் அவர்களின் அறிக்கையால் முஸ்லிம் சமூகத்திற்குள் ஆளுநர் மீது தவறான அபிப்பிராயம் எழுந்தமை பெரும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி திணைக்களத்திற்கு முன்னால் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், மீனவ சங்கம், மீன்பிடி திணைக்களம் உட்பட அதுதொடர்பான அதிகாரிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சந்தித்து அப்பிரச்சினை குறித்துக் கலந்துரையாடினார்.

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட அளவீடைக் கொண்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினை இல்லையெனவும், அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அளவீடு, அங்குலங்களைக் கொண்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாமென நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, ஆளுநரால் எடுக்கப்பட்ட சுமுகமான நடவடிக்கையின் மூலம் மீனவர்களால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மீனவர் பிரச்சினை குறித்து ஆளுநரால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிந்துகொள்ள முயற்சிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், பிழையான அறிக்கைகளை வெளியிட்டு தன்னுடைய அரசியல் பிழைப்பை நடத்த பெரும் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டார்.

இம்ரான் மகரூப் எம்.பியின் இந்த பிழையான அறிக்கையின் மூலம் மக்களை பிழையாக திசை திருப்பும் வகையில் உள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் மகரூப் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை முற்றிலும் பிழையான விடயமாகும்.

எனவே இவ்வாறான விடயங்களை நாடாளுமன்றத்தினூடாக சட்டமாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சிக்காமல் மக்களை பிழையான வழியில் திசை திருப்புவதற்கு எதிராக இவர் மீது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு இவருக்கு எதிராக மக்கள் விழித்தெழவேண்டுமென மக்களை வேண்டிக் கொள்கின்றேன் என்று குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.முபாரக் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.