12 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் 4 பெண்கள் உள்ளிட்ட ஐவர் விமான நிலையத்தில் கைது!

12 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 5 பேரும் டுபாயிலிருந்து புதன்கிழமை 27 ஆம் திகதி இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

டுபாயிலிருந்து புதன்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு வருகை தந்த முதலாவது விமானத்தில் 3 பெண்களும் ஓர் ஆணும்  வருகைதந்துள்ளதுடன் அதிகாலை 5.25 மணிக்கு வந்த விமானத்தில் பெண்ணொருவர் வருகை தந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும், பயணப் பொதிகளிலும் மறைத்து வைத்திருந்த போது, சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்ட 5 பேரையும் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்