2048 பசுமைப் பொருளாதார வேலைத் திட்டம் தேவையான நிதியைபெற பலநாடுகள் ஆதரவு! அனில் ஜாசிங்க தெரிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சர்வதேச மாநாடுகள் மற்றும் அரச தலைவர்களின் சந்திப்புகளில் ஜனாதிபதி விடுத்த கோரிக்கைகளின் பலனாகக் குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தங்களை செய்துகொள்ள அந்த நாடுகள் இணங்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிய அரசாங்கத்துக்கும் தனியார் துறைக்கும் பசுமை முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும் இந்தச் செயற்பாடுகளின் மைல்கல் இலக்காகும் என்றும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 101 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் –
ஜனாதிபதியின் காபன் கிரெடிட் திட்டம் உள்ளிட்ட சர்வதேச முயற்சிகளின் பலனாக, சிங்கப்பூருடனும் இலங்கை ஒப்பந்தத்தில் கைசாத்திட முடிந்துள்ளதெனவும் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்க சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஊடாக விவசாயிகள் உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மேலும், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்கத் தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மழை, வெள்ளம், வறட்சி போன்ற காலநிலை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட முறைப்படியே நிகழ்ந்தன. ஆனால் தற்போது காலநிலை மாற்றங்கள் கணிக்க முடியாத வகையிலேயே நிகழ்கின்றமையே காலநிலை மாறுபாட்டிற்கு முக்கிய காரணமென அறியப்பட்டுள்ளது. இந்த நிலை கட்டுக்கடங்காமல் போனால் மேலும் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து இயற்கை அனர்த்தங்கள் அதிகரிக்கும்.
தொழில் புரட்சியுடன் ஏற்பட்ட புதைபடிவ எரிபொருள்களின் எரிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த புதைபடிவ எரிபொருள்களை எரிப்பது, குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம், காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம், உலக வெப்பநிலை அதிகரிப்பு, பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு, பல்வேறு நாடுகளின் தட்பவெப்ப மண்டலங்களில் பருவநிலை மாற்றங்கள், அதாவது அதிக மழை பெய்யும் பகுதிகளில் மழை மேலும் அதிகரிப்பது மற்றும் வறட்சி பகுதிகளில் வறட்சி அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தில் பெரும் மாற்றங்கள்.
இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு இதன் தாக்கம் மிக அதிகம். சர்வதேச அளவில் ஒப்பிடும் போது புதைபடிவ எரிபொருள் எரிப்பு மற்றும் பச்சை வீட்டு வாயுக்கள் மீதான இலங்கையின் தாக்கம் மிகக் குறைவாகக் காணப்பட்டாலும், சுற்றுச்சூழலுக்கு எல்லைகள் இல்லாததால், பெரிய நாடுகளின் செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதன்படி, இந்நிலைமையைக் கட்டுப்படுத்தப்படாவிட்டால் 2090 ஆம் ஆண்டளவில் யாழ். குடாநாட்டின் சில பகுதிகள் மூழ்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. உவர்நீர் மட்டம் அதிகரித்து விவசாயத்துறை மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் செயற்படுவதற்கு காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் சர்வதேச ரீதியில் உலக நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன. அத்தோடு, காலநிலை அனர்த்தங்கள் தொடர்பிலான தேசிய மட்டத்திலான நிர்ணயிப்புக்களுக்கான ஒத்துழைப்புக்களையும் அனைத்து நாடுகளும் வெளிப்படுத்தின.
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களை மட்டுப்படுத்தல், பாதிப்புக்களுக்கு மத்தியில் வலுவாக எழுச்சி பெறல், பாதிப்புக்களுக்கு ஈடுகொடுத்தல் தொடர்பிலான முறைமைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதன் மூலம் சூரிய சக்தி, நீர் மற்றும் காற்றாலை மின்சாரம் , புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆகியன தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த முடியும். அண்மையில் எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை சுபீட்சத்துக்கான திட்டத்தை முன்மொழிந்தார்.
இதன்போது, காலநிலை மாற்றத்தைக் கையாள அவசியமான நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுடன் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிதி ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை பலமான நாடுகளுக்கு இலங்கை உள்ளிட்ட சிறிய நாடுகள் வலியுறுத்தியிருந்தன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டிலும் ஏனைய சர்வதேச மாநாடுகளிலும் இது தொடர்பில் பெருமளவில் வலியுறுத்தியிருந்தார். பல வருட முயற்சிகளின் பலனாக டிசம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான மாநாட்டில், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச நிதியமொன்றை உருவாக்குவதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுப்பதற்கான உலகின் மிகப்பெரிய நிதியமாக ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற கட்டமைப்பு அமைப்பில் உள்ள உலகளாவிய காலநிலை நிதியமே காணப்படுகின்றது. அதற்கு வருடாந்தம் 100 பில்லியன் டொலர்களைச் வழங்குவதாக உறுதியளித்திருந்த செல்வந்த நாடுகள் அதனைச் செய்யத் தவறியுள்ளன.
மேலும், காலநிலை நடவடிக்கை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு நிதியளிக்க இன்னும் பல வழிகள் உள்ளன. அத்தகைய ஒரு முறையாகவே கார்பன் நிதியம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பாகவே, உலகின் 194 நாடுகளால் கார்பன் பொறிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கார்பன் பொறிமுறையூடாக இலங்கையின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னோடியாகச் செயற்பட்டார். அந்த பொறிமுறையின் கீழ் இரு நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் செயலாற்றக்கூடிய இயலுமை காணப்படுவதோடு, ஜப்பானுடன் ஜே. சி.எம் ஒப்பந்தத்திலும் கைசாத்திடப்பட்டிருந்தார்.
இதனால் பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக இலங்கை நிறுவனங்களுடன் இணைந்து ஜப்பான் நிறுவனங்களும் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். ஜப்பான் நிறுவனங்கள் மாத்திரமன்று ஜப்பான் அரசாங்கமும் குறிப்பிடத்தக்க அளவு முதலீட்டை மேற்கொள்ளும். மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்காகவே அந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும். இங்கு டீசலை படிம எரிபொருளாக எரிப்பது குறைக்கப்படுகிறது. அதனாலேயே காபன் வர்த்தகம் உருவானது என்பதோடு தற்போது காபன் வர்த்தகத்திற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, உச்சிமாநாட்டில் காலநிலை நீதிக்கான கூட்டாக நாங்கள் பணியாற்றி வருவதோடு, பாதிப்பு மற்றும் இழப்பீடுக்கான நிதியம், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய, தேசிய காலநிலை மாற்ற சட்டத்தை தயாரிப்பதற்கான சகல வழிமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்துக்கு முன்னுரிமை அளித்து, உலக நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் புதிய சுற்றாடல் சட்டத்தை தயாரிப்பதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பாகத் தயாரிக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டத்திலும் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள் சட்டபூர்வமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் முழுமையான நன்மைகளை அடைய முடியும்.
இந்த அனைத்து முதலீடுகளும் சுற்றாடல் பாதுகாப்பிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றாடல் பாதுகாப்புக்கள் அதிகரிக்கும் அளவுக்கு காலநிலை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களின் தன்மைகளையும் குறைத்துக்கொள்ள முடியும். அதனை விவசாய, மீன்பிடி உள்ளிட்ட பல துறைகளுக்கும் கிடைக்கும் நன்மை எனவும் சுட்டிக்காட்ட முடியும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை