கல்முனை பிரதேச செயலக விவகாரம்: 35 நிமிடங்கள் சுமந்திரன் கடும் விவாதம் பதில்வாதம் ஒக்ரோபர் 03, 06 திகதிக்கு!

 

நூருல் ஹூதா உமர்

ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 03 ஆம், 06 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்முனை விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரின் சட்டத்தரணியாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இடைக்கால தீர்வு வேண்டி சுமார் 35 நிமிடங்களுக்கு மேலாக 49 காரணங்களை முன்வைத்து தமக்கு சாதகமான ஆவணங்களை நீதிமன்றுக்கு சமர்ப்பித்து தன்னுடைய தரப்பு வாதத்தை ஆக்ரோசமான முறையில் மன்றில் முன் வைத்து இடைக்கால தீர்வை வலியுறுத்தினார்.

குறித்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் அவரது சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வாதத்திற்கு பதில் வாதத்தை நீதிமன்றில் முன்வைக்க நேரம் போதாமை காரணமாக எதிர்வரும் 03 ஆம், 06 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த நாள்களில் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் தமது வாத்தை முன்வைக்க உள்ளனர்.

இது விடயமாக மனுதாரர், இடையீட்டு மனுதாரர்களின் வாதம் முடிவடைந்த பின்னர் நீதிமன்றம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.