நாட்டின் பொருளாதார நிலைமையால் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளை நோக்கி நகர ஆரம்பிப்பு! சர்வதேச மாநாட்டில் எஸ்.எம். சபீஸ் கருத்து

 

நூருல் ஹூதா உமர்

இளைஞர், யுவதிகளின் பங்குபற்றலுடன் எமது உலகை சமாதானம் நிறைந்த சூழலாக வடிவமைத்துக் கொள்வதற்கான ஒண்றிணைந்த முயற்சியில் நாங்கள் இங்கு குழுமியிருயிருக்கின்றோம். முழு உலகமும் சமமான கட்டமைப்பு, மனித உரிமைக்கான மரியாதை மற்றும் பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுமிக்க சூழலைக் கொண்ட சமாதானம் நிறைந்த ஒரு சூற்றாடலின் தேவையில் உள்ளது என உலகளாவிய இளைஞர் அமைதி விழா 16 ஆவது மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

இளைஞர் அமைதிவிழா 16 ஆவது மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அந்த மாநாட்டில் உரையாற்றிய அவர், தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில் –

தற்காலங்களில் நாங்கள் வளங்களின் தட்டுப்பாட்டை அனுபவிக்கின்றோம், அத்துடன் இவ்வளங்களை வினைத்திறனற்ற முறையில் முகாமைத்துவம் செய்து பகிர்ந்தளிப்பது நெருக்கடி, முரண்பாடுகளின் விளைவால் ஏற்படும் அமைதியின்மைக்கு விட்டுச் சென்றுள்ளது. அண்மைக்காலமாக உக்ரைன்-ரஷ்ய நாடுகளுக்கிடையிலான யுத்தம் இவ்விரு நாடுகளில் மாத்திரம் மிக மோசமான விழைவுகளை ஏற்படுத்தவில்லை. உலகம் முழுவதும் அதன் தாக்கம் வியாபித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா மீது, உணவு மற்றும் சக்தி வளங்களுக்காக தங்கி வாழும் நாடுகள் நெருக்கடிகளையும் மற்றும் சமூக-பொருளாதார கோளாறுகளையும் சந்திக்க நேர்ந்துள்ளது.

எனது அபிப்பிராயத்தில் அமைதியின்மை என்பது ஒரு பூகோளமயமான நிகழ்வாகும். அது பூகோளமயமான சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரத்தை பாதிக்கிறது. அமைதியின்மையை, நாம் பூகோளச் சூழலிலே நோக்க வேண்டும். அதன் பின்னணியில் பயனுள்ள தேசிய மற்றும் பிராந்திய மட்டத்திலான சமாதானத்தைக் கட்டியெழுபும் முயற்சி பூகோள மட்டத்தில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் என நான் நம்புகிறேன்.

தனிநபர்களுக்கிடையேயும் சமூகங்களுக்கிடையேயும் நிரந்தர சமாதானத்தை உருவாக்க சமூக மூலதனத்தை கட்டியெழுப்புவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சமூக மூலதனம் என்பது பகிர்தளிக்கும் பண்புகள் அல்லது வழங்களை கொண்ட தொகுப்பாகும். இது சமமான கட்டமைப்பையும், மனித உரிமைக்கான மரியாதையையும், பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுச் சூழலையும் இவைகளின் விளைவால் வளங்களை பகிர்ந்துகொள்வதில் சமத்துவத்தையும் உயர்த்தும். உலகின் சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசியினர் இளைஞர்கள் என சொல்லப்படுகிறது. இளைஞர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்புகள் ஆவர்.

இளைஞர்கள் அபிவிருத்தி முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற வேண்டும். இவர்கள் சமூக-பொருளாதார மற்றும் தலைமைத்துவ துறைகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் முடிவடைந்த யுத்தம், உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற கொவிட்-19 தொற்று மற்றும் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி என்பன இந்த நாட்டின் இளைஞர்களின் விருத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அவர்களின் நலிவுறு தன்மையையும் அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வை வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களில் பெரும்பாலானோர், விசேடமாக கிராமப் பகுதிகளில் வாழ்பவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை நோக்கிய அணுகல் குறைவாகவே உள்ளன. சிலசமயங்களில், இவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டும் சித்திரிக்கப்பட்டும் வருகிறார்கள், இளைஞர்கள் ஏலவே, திறன் குறைந்த வெளிநாட்டு வேலைகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.

இளைஞர்கள் சமாதானத் தூதுவர்களாக பணியாற்றுவது மாத்திரமல்லாமல் அவர்கள் சமாதானத்தில்; வாழ்ந்து சமாதானத்தை அனுபவிப்பவிப்பதன் மூலம் சமாதானத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும். இந்த 16 ஆவது மகாநாடு, பூகோள சமாதானத்தில் இளைஞர்களின் பங்குபற்றலை அதிகரிக்க அதிகமான புதுமையான திட்டங்களைக் கொண்டு, இளைஞர்களுக்கான களத்தை மேலும் மேம்படுத்தும் ஏன விசுவாசத்துடன் நம்புகிறேன். – என்றார்

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். பல நாடுகளையும் சேர்ந்த இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் செப்ரெம்பர் 30 தொடக்கம் ஒக்ரோபர் 02 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்