இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து வடக்கில் தமது காணிகளுக்கு வேலி அமைக்கும் பொதுமக்கள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அந்நிலையில் கடந்த ஜூன் மாத கால பகுதியில் அப்பகுதியில் இருந்த நிலைகொண்டு இருந்த இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறினர்.

இராணுவத்தினர் வெளியேறிய போதிலும் அப்பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படாததால், மக்கள் மீள் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டது.

அதனால் அப்பகுதி ஆள்களற்ற சூனிய பிரதேசமாகக் காணப்பட்டமையைத் திருட்டுக் கும்பல்கள் தமக்குச் சாதகமாக அதனைப் பயன்படுத்தி வீடுகளை உடைத்து, கதவு, ஜன்னல்கள், அதன் நிலைகள் மற்றும் இரும்புகள் என்பவற்றைக் களவாடிச் சென்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் பிரதேச செயலகம் என்பவற்றில் முறையிட்டும், திருட்டு கும்பல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதனை அடுத்து , தம்மை மீள் குடியேற தற்போது அனுமதிக்கா விடினும் , எங்கள் காணிகளை எல்லைப்படுத்தி காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதிக்க  வேண்டும் என கடிதம் மூலம் தெல்லிப்பழை செயலரிடம் கோரப்பட்டதை அடுத்து வேலி அடைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து காணி உரிமையாளர்கள் தமது காணிகளை எல்லைப்படுத்தி வேலிகளை அடைத்து வருகின்றனர்.

அதேவேளை, கடந்த 33 வருட காலமாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியினுள் காணப்பட்ட மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய புனரமைப்பு பணிகளையும் அப்பகுதி மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்தினர் எமது காணியில் இருந்து வெளியேறி 3 மாத காலத்திற்கு மேலாகியும்  எமது சொந்த காணிகளில் மீள் குடியேற இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே எம்மை மீள் குடியேற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.