பாதுகாப்புப் பிரதானிகளின் முன்னிலையில் சந்திம வீரகொடி அநாகரிகமாக நடந்தார்! துறைசார் தெரிவுக்குழுவிலிருந்து நீக்குங்கள் என்கிறார் வீரசேகர

 

தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் பாதுகாப்பு பிரதானிகளின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அநாகரீகமான முறையில் நடந்துக் கொண்டார்.

ஆகவே, அவரைக் குழுவில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளேன் எனத் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை முன்வைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் எனது பெயரையும் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது.பாதுகாப்பு துறையின் வருடாந்த அறிக்கை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, சுதர்ஷ்ன தெனிபிடிய, ரவூப் ஹக்கீம், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குழுக் கூட்டத்துக்கு தாமதமாகவே வருகை தந்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்துக்குப் பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டு கலந்துரையாடிய போது நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி விடயதானத்துக்கு அப்பாற்பட்ட வகையில் தேவையற்ற கேள்விகளைக் குழுவில் முன்வைத்தார்.

பாதுகாப்பு பிரதானிகளின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதால் 225 உறுப்பினர்களின் சிறப்புரிமையும் மலினப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து அவரை (சந்திம வீரக்கொடி) நீக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

இராணுவத்தின் செலவுகள், வாகன பாவனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யாக்கப்பட்டுள்ளன. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு செயலாளர்கள் உட்பட பாதுகாப்பு அதிகாரிகளின் சலுகைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சந்திம வீரக்கொடி கருத்து தெரிவித்துள்ளமை வெறுக்கத்தக்கது. இராணுவத்தினரது ஒழுக்கம் பற்றியும் இவர் கேள்விகளை முன்வைத்துள்ளார்.இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இராணுவத்தினர் பாதுகாத்ததை இராணுவத்தின் ஒழுக்கம் என்றே குறிப்பிட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அநாகரிகமான முறையில் செயற்பட்டதற்கு சாட்சியம் உள்ளது.’நாங்களும் அரச அதிகாரிகள்,நாட்டுக்காக சேவையாற்றியுள்ளோம். ஆகவே எமக்கான கௌரவத்தை வழங்குங்கள் ‘என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியிடம் வலியுறுத்தினார்.

இதன்போது பாதுகாப்புச் செயலாளர் உட்பட முப்படைகளின் தளபதிகளுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருக்குமாயின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் (சந்திம வீரக்கொடி) சார்பில் மன்னிப்பு கோருகிறேன் ‘என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியின் செயற்பாடுகளால் பாதுகாப்பு தரப்பினர் பாதிக்கப்பட்டிருப்பார்களாயின் அதற்காக வேதனையடைகிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.