பிரதான 3 அரச நிறுவனங்களுக்கு 2024 தொடக்கம் வருமான இலக்கு! ஜனாதிபதி தீர்மானம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றை வினைத்திறனாக்கும் வகையில் 2024ஆம் ஆண்டு முதல் இவற்றுக்கு வருமானத்தை ஈட்டுவதற்கான இலக்குகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த திணைக்களங்கள் வருடத்துக்கு ஈட்ட வேண்டிய வருமானம் உள்ளிட்ட இலக்குகள் வழங்கப்படவுள்ளன.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் முறையாக செயற்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.  அதற்கமைய அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதில் இந்த பலவீனமாக செயற்பட்டு வருகின்றமையை அரசாங்கம் அவதானித்துள்ளது.

இந்தத் திணைக்களங்களில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் மிகவும் பலவீனமானதாகக் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குறித்த திணைக்களங்கள் 2024 இலிருந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் இலக்கிற்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து 1667 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கத்திடமிருந்து 1217 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களத்திலிருந்து 217 பில்லியன் ரூபா என்ற வகையில் 3101 பில்லியன் ரூபா வருமான இலக்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஆனால் முதல் அரையாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுமார் 956 பில்லியன் ரூபாவையும், இலங்கை சுங்கம் சுமார் 578 பில்லியன் ரூபாவையும், மது வரித் திணைக்களம் சுமார் 109 பில்லியன் ரூபாவையும்,  மொத்தமாக சுமார் 1643 பில்லியன் ரூபாவை மாத்திரமே வருமானமாகப் பெற்றுள்ளன.

அதற்கமைய இந்த வருட இறுதிக்குள் சுமார் 2380 பில்லியன் ரூபாவை மாத்திரமே உரிய இலக்கில் இருந்து பெற முடியும் என அரசாங்கம் நம்புகிறது. இதனால் 637 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலைமை அடுத்த வருடத்திலும் ஏற்படாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.