பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் நோக்கில் அமைச்சரவை பத்திரம் ; ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை

பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் நோக்கத்துடன் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அந்த கட்சியின் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவையில் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார். பாராளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் அரசியலமைப்பில் மாற்றங்கள் அவசியமாகும். அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்கேற்ப தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதற்குள் சிக்கி எவரும் தமது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி விடாதீர்கள். தற்போது பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகக் களமிறங்க முடியாது என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியும்.

எனவே, இதன் ஊடாக பஷில் ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கி பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வேட்பாளராவதே ரணிலின் திட்டமாகும்.

அதேபோன்று இதனை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பினை மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார். அவர் எவ்வாறான தந்திரங்களை முன்னெடுத்தாலும் நாம் பாராளுமன்றத்தில் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் அவரால் காலம் தாழ்த்த முடியாது. அடுத்த வருடம் ஆகஸ்ட்டில் நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பொதுஜன பெரமுனவில் பலர் எம்முடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நிச்சயம் அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்வர். பகிரங்க ஊடகத்தில் எம்மால் இதனைக் கூற முடியாது. எனினும் பாராளுமன்றத்தில் கேட்டால் கூறுவோம். மக்கள் ஆணையை எவராலும் பலவந்தமாகக் கோர முடியாது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.