தேசிய கீதம் தமிழில் பாடாததால் கவலை! அமைச்சர் டக்ளஸூக்கு வந்த மொழிப்பற்று

”யாழில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிக்கின்றது’ என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (என்.வி.கியு) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை யாழ். சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  குறித்த நிகழ்வில்  தேசிய கீதம் தமிழில் பாடப்படாததை சுட்டிக்காட்டியிருந்தார்.

இது குறித்து அவர் தெரிவித்தவை வருமாறு –

தமிழர் பண்பாடு எனக் கூறி  இங்கு சில நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் இங்கு தேசிய கீதம் தமிழில் பாடப்படவில்லை. இது மனவருத்தத்துக்குரியது. நான் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளிலும், வட மாகாணத்தில் நான் தலைமைத்துவம் வகிக்கின்ற நிகழ்ச்சிகளிலும் பொதுவாக  தேசிய கீதம் தமிழிலேயே பாடப்படுவதுண்டு.

சிலவேளை வேறு அமைச்சர்கள் வருகின்ற போது என்னுடைய கையை மீறி போய் இருக்கலாம். அதை நான் கண்டித்ததுண்டு.  இன்றைக்கும் ஒரு தவறை இங்கிருக்கும் அதிகாரிகள் விட்டு விட்டார்கள்.

இங்கு நடக்கின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலுவான கருத்து. சமீபத்தில் கூட ஜனாதிபதி மட்டக்களப்பிலும் இது தொடர்பான கருத்தை சொல்லி இருக்கின்றார். தேசிய விழாவில் கூட ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடிகின்ற நேரத்தில் தமிழில் பாடுவதற்கான ஏற்பாடு செய்திருக்கின்றார்.

அந்த வகையில் ஜனாதிபதியைப் பொறுத்த வகையில் அல்லது அவருடைய அரசாங்கத்தைப் பொறுத்த வகையில் கொள்கையும் செயற்பாடும் ஒன்றுதான். சில வேளைகளில் சில அதிகாரிகள் அவ்வாறான தவறுகள் விடுகின்றார்கள் ஆனபடியால் இங்கே முக்கியமான அதிகாரிகள் எல்லாம் இருக்கின்றார்கள் அவர்கள் வரும் சந்தர்ப்பங்களில் அவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். – இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.