கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய ‘மீண்டும் பள்ளிக்கு’ நிகழ்வு

பழைய மாணவர்களின் பள்ளிப் பருவத்தை மீண்டும் மீட்டிப் பார்க்கும் ‘பேக் டூ ஸ்கூல்’ எனப்படும் ‘மீண்டும் பள்ளிக்கு’ நிகழ்வு நேற்று கொழும்பு 04 – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ‘கொழும்பு இந்துக் கல்லூரியில்’ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் மு. நாகேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கடந்த காலங்களில் பாடசாலையில் கல்வி கற்பித்த 50 மேற்பட்ட ஆசிரியர்களும், கல்வி கற்ற 500ற்கு மேற்பட்ட பழைய மாணவர்களும் சிறப்பதிதிகளாக முன்னாள் அதிபர் T. முத்துக்குமாரசுவாமி மற்றும் முன்னாள் உப அதிபர் T. இராஜரட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தேசியக் கொடி, பாடசாலைக் கொடி, நந்திக் கொடி ஏற்றப்பட்டதோடு அதிபரால் பாடசாலை நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்லூரி பிரதான மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் பள்ளிக்கு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்டடதோடு பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலையின் பழைய மாணவரும் IDM nation campus இன் அதிபருமாகிய விநாயகமூர்த்தி ஜனகனினால் ஒரு மில்லியன் ரூபாவுக்கான நிலையான வைப்புச் சான்றிதழ் பழைய மாணவர் சங்க செயலாளர் சு. இளங்கோ விடம் கையளிக்கப்பட்டது.

மேலும் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினரால் பாடசாலையில் தற்போது கல்வி பயிலும் விளையாட்டுக்களில் திறமையுடைய 10 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின்www.hccoba.com என்ற உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாடசாலை அதிபர் மு. நாகேந்திரா பாடசாலையின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள் பெரும்பங்கு வகிப்பதைக் குறிப்பிட்டதோடு ஏனையவர்களுக்கும் பாடசாலை வளர்ச்சியில் பங்குபற்ற வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆர். இளங்கோ கருத்து தெரிவிக்கையில் ஏனைய நாடுகளில் செயற்பாட்டில் உள்ள பழைய மாணவர் சங்கங்களின் மூலம் எமது பாடசாலையின் வளர்ச்சியில் பாரிய மாற்றத்தினை கொண்டு வர முடியும் என்றும் அதற்கு அனைத்து பழைய மாணவர்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றதோடு இந்த நிகழ்வுகளை திறம்பட ஒருங்கிணைத்து நடாத்திய பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக உப தலைவர் லக்ஷயன் முத்துக்குமாரசுவாமி உட்பட அனைத்து பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்…

  

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.