வீதியில் கண்டெடுத்த தங்க மாலை மோதிரம் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

களவு, கொள்ளை, பிறரின் உடைமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும், வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருள்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இவ்வாறான சிறப்பு சம்பவமொன்று நேற்று (திங்கட்கிழமை) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பஸ் நிலையத்தின் அருகில் நடந்து சென்ற கோயில் வீதி, திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த அன்ரி மலேரியா ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் கணபதிப்பிள்ளை கார்த்திகேசு என்பவர் மாலை ஒன்றையும் மோதிரம் ஒன்றையும் கண்டெடுத்துள்ளார்.

இதன்போது, அருகில் இருந்த இன்னுமொருவர் அது தன்னுடையது என கூறி பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அதனை உரியவரிடமே ஒப்படைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இருந்தபோதிலும் குறித்த நபர் அந்த மாலையைத் தனது என பெற்றுக்கொண்ட நிலையில் மாலை மற்றும் மோதிரத்தை கண்டெடுத்த கார்த்திகேசு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் நகையினை மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து கண்டெடுத்தவர் மூலமாக பெற்றுக்கொண்டனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.பி.விஜயதுங்கவின் ஆலோசனைக்கு அமைவாக பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசிப் தலைமையிலான பொலிஸார் மாலையைப் பொறுப்பேற்றதன் பின்னர் மாலை மோதிரத்தை ஒப்படைத்தவரை பாராட்டினர்.

இதேநேரம் அக்கரைப்பற்று பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர் ஆறுமுகம் அசோக்கவும் சம்பவ இடத்திற்கு சென்று மாலையை ஒப்படைத்தவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.