கடன் மறுசீரமைப்புக்குச் சீனா இணக்கம் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை! என்கிறார் பாலித ரங்கே பண்டார

சீனாவின் எக்சிம் வங்கி 4.1 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதன் மூலம் நாட்டின் பாகேக்கை சிறந்த நிலைக்கு உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக மீள ஆரம்பித்திருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாகக் கடந்த வாரம் இந்து சமுத்திர வலய மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த அனைத்து அரசாங்கங்களும் இலங்கையை பாராட்டி கருத்து தெரிவித்திருந்ததுடன் அவர்களின் உதவிகளை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்திருந்தன.

அத்துடன் எமது கடன் மறுசீரமைப்பில் முக்கிய நாடான சீனா தற்போது அவர்களின் விருப்பத்தை தெரிவித்திருக்கிறது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு பெரிஸ் சமூகம் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஏ்ற்கனவே தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன. சீனாவின் எக்சிம் வங்கி 4.1 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு இணக்கம் தெரிவித்திருக்கிறது.

இதன் பிரகாரம் நாட்டின் பாகேக்கை சிறந்த நிலைக்கு உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டிருக்கிறது. நாடு தொடர்பாகவும் நாட்டின் எதிர்காலம் தொடர்பாகவும் எமக்கு நம்பிக்கை வைத்துக்கொள்ள முடியுமான நிலைக்கு நாட்டை கொண்டுவந்திருக்கிறோம். அதனால் ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்பாகவும் அவரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் நம்பிக்கைகொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோன்று வீழ்ச்சியடைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலம்மிக்க கட்சியாக மாற்றுவதுபோல் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீள கட்டியெழுப்பி வருகிறோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்