இந்தோ-பசிபிக்கில் நீலப் பொருளாதாரத்தை உறுதிசெய்ய அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது – ஜூலி சங்

இந்தோ-பசிபிக் முழுவதும் இலங்கை மற்றும் பிற நாடுகளுக்கு வளமான நீலப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், மூலோபாய கற்கைகளுக்கான பிராந்திய மத்திய நிலையம் (RCSS) மற்றும் அமெரிக்க சமாதான நிறுவனம் (USIP) ஆகியவற்றுடன் இணைந்து, 16 ஆம் திகதி திங்கட்கிழமை “சமுத்திரப் பாதுகாப்பு: தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரம்” எனும் தலைப்பிலான மாநாட்டிற்காக இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலுமிருந்து அறிஞர்களை ஒன்றிணைத்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்பு, நிர்வாகம், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நீலப் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சமுத்திரப் பாதுகாப்பு ஆராய்ச்சி போன்ற துறைகளை உள்ளடக்கிய இந்து சமுத்திரம் தொடர்பான விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சியாளர்களை இம்மாநாடு ஒன்றுகூட்டியது.

இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர்,

“ இந்து சமுத்திரத்தின் மீது கவனம் செலுத்தும் தெற்காசிய அறிஞர்களின் வலையமைப்பைப் பாராட்டினார். பிராந்தியத்தின் நீலப் பொருளாதாரத்தில் இலங்கை வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்த அவர், “நிலைபேறான நீலப் பொருளாதாரங்களில் முதலீடு செய்வது, பொருளாதார அபிவிருத்தியைத் தூண்டுகின்ற ஒரு சக்தியைப் பெருக்கும் காரணியாக அமைவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன எவ்வாறு பரஸ்பரம் ஒன்றையொன்று வலுவூட்டுகின்றன என்பதையும் நிரூபிக்கும் விடயமாகும்.

இந்தோ-பசிபிக் முழுவதும் இலங்கை மற்றும் பிற நாடுகளுக்கு வளமான நீலப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்தோ- பசிபிக் மூலோபாயம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்க அரசாங்கம் இப்பிராந்தியத்தில் இந்தோ-பசிபிக் முன்னுரிமைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகளாக 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்குவதாக அறிவித்துள்ளது.” என சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவின் வலிமை குறித்தும் பேசிய தூதுவர் சங், “தனது சொந்த அபிலாஷைகளையும் நோக்கங்களையும் நிலைநாட்டுவதற்கும் உலக அரங்கில் சமமாக மதிக்கப்படுவதற்கும், மற்றும் தனது மதிப்பீடுகள் மற்றும் தனது மக்களின் தேவைகள் மற்றும் நலன்களுடன் ஒத்திசையும் முடிவுகளை மேற்கொள்வதற்கும் இலங்கைக்கு இருக்கும் உரிமையினை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. உண்மையில், அக்கொள்கைகள் எமது இருதரப்பு உறவை வழிநடத்துவதற்கு உதவுகின்றன.” எனவும் தெரிவித்தார்.

வொஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க சமாதான நிறுவனத்தின் (USIP) வருகைதரும் நிபுணர் நிலந்தி சமரநாயக்க தனது தலைமை உரையை ஆற்றும் போது,

“இந்து சமுத்திரமானது அதன் பொருளாதாரத்திலிருந்து அதன் முக்கியத்துவத்தைப் பெறுகிறது, இது ஒன்றிணைந்த இலக்குகளை உருவாக்குகிறது. இப்பகுதி மலாக்கா நீரிணை வழியாகவும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நீரிணைகளான ஹோர்முஸ் மற்றும் பாபெல்-மண்டெப் மற்றும் மொசாம்பிக் கால்வாய் வழியாகவும் பசிபிக்கின் பரபரப்பான நீரை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையாக திறனுடன் செயற்படுகிறது.

ஹைட்ரோகார்பன்கள், கொள்கலன்கள் மற்றும் மொத்த சரக்குகளின் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இந்து சமுத்திரத்தினூடாக இடம்பெறுகிறது.

இப்பிராந்தியத்தின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, இதன் கடல் பாதைகளை திறந்ததாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் பல நாடுகள் ஒரு பொதுவான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

இந்தோ பசுபிக் முழுவதும் உள்ள இராஜதந்திர தூதரகங்களின் பிரதிநிதிகள், இலங்கை அரச அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களும் மாநாட்டில் பங்குபற்றியவர்களுள் உள்ளடங்குவர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.