அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மூலம் இழைக்கப்பட்ட நிதியை மீளப் பெறுவது சாத்தியமற்றது! லசந்த அழகியவண்ண தெரிவிப்பு

தகவல் தொழில்நுட்பத்தை உபயோகித்து நிறுவனங்கள் இணைந்த தரவுத் தொகுதியை செயற்படுத்தினால் மாத்திரமே அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகளை நிறுத்த முடியும், அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மூலம் இழக்கப்பட்டுள்ள நிதியை மீண்டும் பெற்றுக் கொள்வது சாத்தியமற்றது என கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கோபா குழுவின் 100ஆவது ஆண்டு நிறைவு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

100 வருடங்களுக்குப் பின்னர் கோப் குழுவின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளை பலப்படுத்தி காலத்திற்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய தேவையாக உள்ளது.

அதற்கான சட்டமூலத்தை ஆளும் கட்சி சபையில் சமர்ப்பித்துள்ளதுடன் எதிர்க்கட்சிகள் அது தொடர்பில் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தன. மேற்படி தெரிவுக்குழுவை பலப்படுத்தி நிலையியற் கட்டளையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

பெரும்பாலான நிறுவனங்களில் அந்த நிறுவனங்களுக்கான நோக்கம் நிறைவேற்றப்படுவதில்லை. வேறு வேறு நோக்கங்களே அங்கு நிறைவேறுகின்றன. பல நிறுவனங்களும் திணைக்களங்களும் அவ்வாறே செயற்படுகின்றன.

அதனால் நிதி தொடர்பில் நாம் ஆராய்வது போன்று அந்தந்த நிறுவனங்களில் இடம்பெற வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் ஆராய வேண்டியுள்ளது. அந்தந்த நிறுவனங்களின் இலக்குகள்  குறித்த வருடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதும் எதிர்காலத்தில் எமது செயற்பாடாகும்.

அத்துடன் நாம் அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம். பின்புலங்கள் தொடர்பில் ஆராய்கின்றோம். எனினும் தொழில்நுட்பத்தை பிரயோகிப்பதன் மூலமே நிறுவனங்களின்  மோசடிகள், முறைகேடுகளை நிறுத்த முடியும்.

அதன் ஓர் அம்சமாக நாம் 17 அரச நிறுவனங்களை இணைத்துக் கொண்டு குழு ஒன்றை அமைத்துள்ளோம். நாம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அதனைக் கூட்டி அந்த 17 நிறுவனங்களினதும் மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த நிறுவனங்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் தரவுகளை ஏற்படுத்துவது அவசியம்.

உதாரணமாக சுங்கத்தில் வந்து இறங்குவதோ ஒரு வாகனம் ஆனால் பதிவு செய்வதோ வேறு ஒரு வாகனம். அவ்வாறு ஆயிரம் வாகனங்கள் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

அவ்வாறு வாகன மோசடியில் ஈடுபடுபவர்கள் 40 லட்சம் வரி செலுத்த வேண்டிய வாகனத்திற்கு பத்து லட்சம் வரியை செலுத்தி அதற்கான காரணங்களையும் காட்டுகின்ற நிலையே காணப்படுகிறது. தொழில்நுட்ப உபயோகம் இன்றி இது போன்ற மோசடிகளை நிறுத்த முடியாது. – என்றார்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.