காலநிலைக்கு ஏற்ற விவசாயத்தை நோக்கிய அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பு!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஆகியன இணைந்து இலங்கையில் நிலைபேறான மற்றும் காலநிலைக்கு ஏற்ற விவசாயத்தை நோக்கிய அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்து உலக உணவு தினத்தைக் கொண்டாடியது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐ.நா. நீர் ஆகியன ஒன்றிணைந்து 2021 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் நன்னீர் வளங்கள் மற்றும் அவற்றின் நிலைத்திருக்கும் தன்மையின் மீதான மனித நடவடிக்கைகளின் கணிசமான அழுத்தத்தை பிரதிபலிக்கும் வகையில் 90.8  வீத குறிகாட்டியுடன் இலங்கை ‘உயர் நீர் அழுத்தத்துக்கு உள்ளானதாக’ வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பெறப்படும் மொத்த நன்னீர் வருடாந்தம் 12.95 பில்லியன் கனமீற்றர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நன்னீரில் 82 வீதம் நெல் நீர்ப்பாசனத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் 5 வீதத்திற்;கும் அதிகமான அளவு மற்ற பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய காலநிலை இடர் சுட்டெண்ணில், குறிப்பாக நீர் வளங்கள் மீதான தாக்கத்துடன் தொடர்புடைய காலநிலை அபாயங்களின் அடிப்படையில் இலங்கை தொடர்ந்து உயர்நிலையில் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, ஐ.நா உணவு முகவர்கள் இலங்கை விவசாய உணவு முறைகளை மாற்ற வேண்டியதன் அவசியத்தை கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பங்குபற்றிய உலக உணவு தினத்தை நினைவுகூரும் நிகழ்வில் வலியுறுத்தினார்கள்.

இந்நிகழ்வு, முகவர்களால் ஆதரிக்கப்படும் நவீன அணுகுமுறைகள், நிலைபேறான மற்றும் காலநிலை – எதிர்ப்பு விவசாயத்தை நோக்கி தேசிய அளவிலான வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது. இளம் காலநிலை ஆர்வலர் தாரிகா பெர்னாண்டோவின் விவாதங்கள், கலை மற்றும் சிறப்பு உரை போன்ற நிகழ்வுகள் மூலம் இளைய தலைமுறையினரின் குரல்கள் வெளிப்படுத்தப்;பட்டன.

அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பை அடைவதில் இலங்கையின் தளராத அர்ப்பணிப்பினை கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உரை மீண்டும் உறுதிப்படுத்தியது.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை தேசிய முன்னுரிமைகளாக வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் காலநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இந்த முயற்சியில் ஐ.நா. உணவு முகவர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற  தொழில்நுட்ப ஆதரவுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் பேசிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச், ‘அதிகரித்துவரும் நீர் அழுத்தம் மற்றும் காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் போது, நிலைபேறான மற்றும் காலநிலை-எதிர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையுடன் இணைந்து அதன் நீர் மற்றும் உணவு அமைப்புக்களை பலப்படுத்துவதற்கு தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அனைவருக்கும் போதுமான மற்றும் போசாக்கான உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது’ எனக்குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான எவ்.ஏ.கியு. பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கையின் விவசாய உணவு முறைகளை மாற்றியமைக்க உதவுவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். ‘எதிர்வரும் தலைமுறைகளுக்கு இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கையின் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகள் காலநிலையைத் தாங்கக்கூடியவை என்பதை உறுதிப்படுத்த, அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எவ்.ஏ.கியு. உறுதிபூண்டுள்ளது.

கழிவுகள், மாசுபாடு மற்றும் காலநிலை பாதிப்புகளைக் குறைக்க நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,’ என்று குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐ.எவ்.ஏ.டி. இன் வதிவிடப் பணிப்பாளர் ஷெரினா தபஸ்ஸம், ‘காலநிலை மாற்றம் விவசாயத்திற்கான நீர் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சிறு அளவிலான விவசாயிகளுக்கு சில சமயங்களில் போதிய நீர் கிடைக்காமலும் ஏனைய சமயங்களில் அதிகமான நீரும் கிடைக்கின்றது. இது நீர்ப்பாசன அமைப்புக்களை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது.

எனவே சிறிய அளவிலான விவசாயிகள் தடையற்ற நீர் விநியோகத்துடன் உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யலாம். விவசாயிகள் சூரிய சக்தியில் இயங்கும் தொட்டிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அணுகுவதற்கும், அருவி முறை தொட்டி அடுக்கு அமைப்புகள் போன்ற நீர் சேமிக்கும் பாரம்பரிய முறைகளை மறுசீரமைப்பதற்கும் ஐ.எவ்.ஏ.டி. ஆனது அரசாங்கம் மற்றும் விவசாய சமூகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

இதனால் விவசாயிகள் வருடம் முழுவதும் விவசாயம் மேற்கொள்வதுடன் குறைந்த விளைதிறனுள்ள விவசாயத்திலிருந்து நாட்டிற்கு உணவழிக்கக்கூடிய நீர்ப்பாசன விவசாயத்திற்கு செல்வதற்கு உதவுகின்றது.

‘அண்மைக்காலமாக உணவுப் பாதுகாப்பானது முக்கிய விடயமாகவுள்ளது. ஆனால் நீர் பாதுகாப்பு இல்லாமல் உணவுப் பாதுகாப்பு இல்லை என்பதை நாங்கள் அடிக்கடி மறந்து விடுகிறோம்’ என இலங்கையின் டபிள்யு.எவ்.பி. இன் பொறுப்பாளரும் அதிகாரியுமான ஜெரார்ட் ரெபெல்லோ கூறினார். டபிள்யு.எவ்.பி., தங்கள் பங்காளர்களுடன் சேர்ந்து, உணவு முறைகளை மிகவும் நிலைபேறானதாகவும், தீவிர வானிலை நிலைமைகளுக்கு தாங்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு உதவுகின்றது, சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கிறது, இதனால் ஆண்டு முழுவதும் வயலிலிருந்து மேசைக்கு உணவானது தடையின்றி கிடைக்கிறது.

ஐக்கிய நாடுகளின் அமைப்புடன் எவ்.ஏ.கியு., ஐ.எவ்.ஏ.டி. மற்றும் டபிள்யு.எவ்.பி. ஆகியன இணைந்து இலங்கையில் உணவுப் பாதுகாப்பிற்கான நிலைபேறான மற்றும் காலநிலை – தாங்குதிறன் கொண்ட அணுகுமுறைகளை தீவிரமாக ஊக்குவித்து வருகின்றன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்