அமைச்சர் கெஹலியவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கண்டி மேல் நீதிமன்றத்தில் டிசெம்பர் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது நாவலப்பிட்டிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிண்ணனி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணையின் நிமித்தம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி குருந்துவத்தை பிரதேசத்தில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.

இதையடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அப்துல் காதர், பீட்டர் காத்தகெதர, நந்தன சிசிர குமார, துவான் நிஸாம் மிஸ்கின் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் அப்துல்காதர் மற்றும் துவான் நிஸாம் மிஸ்கின் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக தமது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு 2000 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டபோது குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு இந்த வழக்கு மேல் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.

அந்த வழக்கு தற்பொழுது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கின் சாட்சிகளாக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் வைத்தியர் கே.ஆர். சசேந்திரன் மற்றும் அரச இரசாயன பரீட்சகர் மென்டிஸ் உள்ளிட்ட 55 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.