மீண்டும் கை வைத்தால் இன முரண்பாடு தோற்றம் பெறும் : சரத் வீரசேகர எச்சரிக்கை!
விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்ட திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் புலிகள் அமைப்பை தோற்கடித்ததையடுத்து, இன்று ஜெனிவாவில் போர்க்குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளினாலேயே நாம் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.
இந்த நாடுகள் அன்று எம்மை போர் நிறுத்தம் செய்யுமாறு அறிவித்தன. ஆனால், இன்று காஸா மீது போரைத் தொடருமாறு அமே நாடுகள்தான் தெரிவித்து வருகின்றன. இது உண்மையில் வெட்கத்துக்குரிய விடயமாகும்.
வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பிரிவினைவாதிகள், இன்றும் ஈழக்கனவுடன்தான் இருக்கிறார்கள். அந்த நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். நாம் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்.
இந்நிலையில், திவுல்பத்தான கிராமத்திலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டும் என இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒன்றை தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள். யுத்த காலத்தின்போது புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் அந்த கிராமத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தான், அந்த விவசாயிகள் தங்களின் பூர்வீக நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இவர்களின் பெயர் பட்டியல் அனைத்தும் கிராம சேவகரிடம் உள்ளது. இந்த அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற நினைப்பது தவறாகும்.
இது மீண்டும் தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு இடமளிக்கும். ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றுக்கு வரும் முன்னர் பிரபாகரனிடம்தான் பதவியேற்றார்கள். எனவே, நாட்டில் இல்லாத பிரச்சினையொன்றை ஏற்படுத்த வேண்டாம் என் இவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை