மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நாவிடம் விளக்கம்

மலையக மக்கள் எதிர்நோக்கியுள்ள உரிமை ரீதியான பிரச்சினைகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், உழைப்பு சுரண்டல்கள் மற்றும் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய பிரதானிகளிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தமது தொழிற்சங்கத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக பிரதானிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் உயர்தானிகர் அலுவலகத்தின் பிரதானி மேதகு செட்யா ஜெனிங்ஸ், இலங்கை தொடர்பான இலங்கைக்கான மனித உரிமை பிரிவின் தலைம அதிகாரி எலினா செங் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

அமைச்சருடன், இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த 200 வருடங்களாகக் கடந்துவந்த பாதை குறித்தும், அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் மனித உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் எடுத்துரைத்தனர்.

2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒகோடோவா , மலையக பெருந்தோட்ட சமூகத்தின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

மீண்டும் ஒருமுறை மனித உரிமை உயர்ஸ்தானிகராலய தூதுக்குழு இலங்கைக்கும் பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ள வர வேண்டும் என்ற அழைப்பையும் அமைச்சர் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்