அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை – காமினி வலேபொட

அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களில் தமது வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லையென பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவானது, பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றது.

குறிப்பாக, பொருளாதார நெருக்கடிகளை தணிப்பதற்கு தடையாக உள்ள காரணங்கள் அல்லது பின்னிலையில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக தீவிரமான கரிசனைகளைக் கொண்டுள்ளது.

அதனடிப்படையில் அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாக சமர்ப்பிக்கப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்தகைய நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது நிறுவனங்கள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டள்ளது என்றார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் பதவிகளை துறந்த நிலையில் அவர்களின் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக சரத்வீரசேகர மற்றும் நாலக்க பண்டார கொத்தேகொட ஆகிய இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துறைசார் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலகியதன் காரணமாகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.