வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் மோசமாக பாதிப்படைவு! ஜனாதிபதியுடன் பேசவுள்ளார் மஹிந்த

நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய நெருக்கடிகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடன் இந்த வாரம் இடம்பெறவுள்ள பேச்சின் போது விசேட கவனம் செலுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

பொருளாதார பாதிப்பு மற்றும், வாழ்க்கை செலவு அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாக அமைய வேண்டும்.

மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அவல நிலையை மாற்றியமைக்க வேண்டும். ஜனாதிபதியுடன் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பேச்சின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் முக்கிய அரசியல் தீர்மானங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும். தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடும் கிடையாது. நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை உரிய நேரத்தில் களமிறக்குவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.