தமிழர்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளதாம்! டக்ளஸ் கூறுகிறார்

எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையின் விளைவுகளே அந்தப் படிப்பினைகள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

எமது முன்னோர்கள் காத்துவந்த மரத்தின் விதைகளை நான் மறவாது காத்திருக்கிறேன். இந்த விதைகளையே எனது தாயக்கத்தில் மீண்டும் விதைப்பேன். எழுபது ஆண்டுகள் ஆக்கிரமிப்பிற்கும் அவலங்களுக்கும் மத்தியில் பாலஸ்தீன மண்ணில் இருந்து எழும் நம்பிக்கையின் குரல் இது.

இஸ்ரேல் படையினருக்கும் கமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான மோதல் குறித்தும் மக்களின் அவலங்கள் குறித்தும் எனது கருத்துக்களை வழங்கியமைக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

1914ஆம் ஆண்டு வரையில் ஓட்டோமோன் பேரரசின் கீழிருந்த இப் பகுதி, முதலாம் உலகப் போரில் பேரரசு வீழ்ச்சி காண, பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு, 1948 ஆம் ஆண்டு வரை அதன் ஆட்சி நீடித்தது.

பிரித்தானியர் தமது ஆட்சிப் பகுதியை விட்டு வெளியேறிய சமயத்தில், இப்பகுதியை இரண்டாகப் பிரித்து, பாலஸ்தீன அராபியர்களுக்கென ஒரு நாடும், யூதர்களுக்கு ஒரு நாடும் தோற்றுவிப்பதற்கும், ஜெரூஸலம் நகரத்தை சர்வதேச நகரமாக மாற்றவும் ஐக்கிய நாடுகள் சபை தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.

இதனை யூதத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அரபிய தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்றிலிருந்து இந்த யுத்தம் இன்று வரையில் விட்டு, விட்டு தொடர்ந்து கொண்டெயிருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கின்ற இந்த மோதலானது இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான பொது மக்களை காவு கொண்டிருக்கின்றது. பலரை அங்கவீனமாக்கியுள்ளது. பல வள அழிவுகளைத் தந்து கொண்டிருக்கிறது. நீடித்த காலமாக பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதுவரையில் சுமுகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இருதரப்பினரும் சமாதானத்திற்கு வரவேண்டுமானால் சில விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும். ஒன்று, பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பாலஸ்தீனிய அகதிகளின் நிலை பற்றியது. இவர்களுக்கான வழி என்ன? என்பது தொடர்பில் இருதரப்பினரும் இதுவரை எந்தவிதமான தீர்வுகளுக்கும் வரவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் தீர்வு எட்டப்பட வேண்டியுள்ளது.

இரண்டாவது, மேற்கு கரையில் இஸ்ரேலினால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கள் தொடர்பான விடயம். சர்வதேச விதிகளின்படி இந்தக் குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை நிலைப்பாட்டினை கொண்டுள்ளது. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. எனவே, இந்தக் குடியிருப்புக்கள் அகற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் தீர்வு எட்டப்பட வேண்டும்.

மூன்றாவது, ஜெருசலேம் நகரை இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து இரண்டு தரப்பினரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நான்காவது, இஸ்ரேலைப் போன்று பாலஸ்தீனமும் தனியான சுதந்திர நாடாகக் கருதப்படுமா என்பது தொடர்பிலும் தீர்வு காண்ப்பட வேண்டும். மேற்படி விடயங்கள் தொடர்பில் பேச்சுகள் தொடர்பில் நிரந்தர தீர்வு எட்டப்பட்டு விட்டால், அங்கு நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கான சாத்தியப்பர்டுகள் அதிகம் என்றே கருதப்படுகின்றது.

நானும் எமது மக்களுக்கான நீதியான உரிமைப் போராட்டத்தை வழிநடத்தியவன். அந்தப் போராட்டத்தில் நான் தமிழ் மக்களை மாத்திரம் நேசித்தவன் அல்லன். ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் மலையக மற்றும் இஸ்லாமிய மக்களை மாத்திரமன்றி சிங்கள மக்களையும் ஆழமாக நேசித்தவன். அதுபோல உலக அரங்கில் எங்கெல்லாம் விடியலுக்கான போராட்டங்கள் நடந்தனவோ, அங்கெல்லாம் உள்ள மக்களையும் நேசித்தவன்.

பாலஸ்தீனம் 1978 இல் எமக்கு ஆயுதப் பயிற்சி தந்தது. 1984ஆம் ஆண்டிலும் தோழர்களை அங்கு பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது பாலஸ்தீன மக்களுடன் நான் பழகியிருக்கின்றேன். அவர்களின் ஆழமான உணர்வுகளையும் விரும்பங்களையும் உணர்ந்திருக்கின்றேன். எமது பயிற்சியின் போது அவர்களின் போராட்டங்களிலும் நான் களத்தில் நின்று பங்குபற்றியுள்ளேன்.  ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கின்றேன்.

அங்கிருந்த பல்வேறு விடுதலை இயக்கங்களுடனும் பன்னாட்டு விடுதலை இயக்கங்களுடனும் பழகி இருக்கின்றேன். அவர்களது வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் அப்போது ஆராய்ந்து பார்த்திருக்கின்றேன். பாலஸ்தீன் போராட்ட முறைகளில் மாற்றம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து, அவர்களுடனும் பேசி இருக்கின்றேன்.

அதேபோன்று எமது விடுதலைப் போராட்ட முறைகளிலும் மாற்றம் தேவையென விரும்பியும் இருக்கின்றேன். பாலஸ்தீன போராட்ட அனுபங்களில் இருந்து நாம் பாடங்களை கற்க வேண்டும் என நான் அப்போதே கருதி இருக்கின்றேன். ஆனால் இன்று, எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையின் விளைவுகளே அந்தப் படிப்பினைகள்.

போராட்டம் என்பது நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்துவது, பேச வேண்டிய இடத்தில் பேசுவது, அடைய வேண்டிய இலக்கை சாத்தியமான வழிகளில் அடைவதுமேயாகும். சமாதானத்திற்கான பேச்சு என்ற போர்வையில் அழிவை நோக்கிய வன்முறை ரீதியாக தம்மை பலப்படுத்தும் கபட நோக்கத்தினையே நாம் கண்டிருக்கின்றோம்.

ஒரு கையில் ஒலிவ் மரக் கிளை, மறுகையில் ஆயுதம் இரண்டும் இருக்கின்றது. எதுவேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கட்டும் என்று யசீர் அரபாத் விடுத்த பகிரங்க அறிவிப்பை நான் அன்று ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்.

சந்திரிக்கா அம்மையார் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான ஓர் அற்புதமான தீர்வை முன்வைத்திருந்தார். அப்போது அங்கிருந்து ஒரு கவிஞனின் குரல், ‘தந்ததை வாங்கி தலை குனிந்து கொள்வதற்கு எங்களின் தலைவன் அரபாத் அல்லன்’ என்று உசுப்பேத்துகின்ற கவிதை வரிகளை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன்பின்னரான விளைவுகள் என்னவென்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இன்று மாறிவந்திருக்கின்ற உலகத்தின்  போக்கை உணர்ந்து பாலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும். அங்கு அமைதி நிலவ வேண்டும். மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற நிலைமை பாலஸ்தீனத்தில் மாத்திரமல்ல உலகெங்கும் நிலவ வேண்டும்.

அழிவு யுத்த காலத்தில் எமது மக்கள் உணவின்றி, நீரின்றி, மின்சாரமின்றி, போக்குவரத்தின்றி, கல்வியின்றி பல அவலங்களை சுமந்து நின்ற வேளையில், அதன் வலிகளை நேரில் கண்டு அதற்கு கரம் நீட்டி, மக்களின் துயர் துடைத்தவர்கள் நாங்கள். இன்று காசாவிலும் இதுவே நடத்திருக்கின்றது. அங்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான உதவிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் எமது போராட்ட வழிமுறைகளை மாற்றிக் கொண்டவர்கள். எமது மக்களின் பயணத்தை எங்கிருந்து தொடங்குவது என்ற தீர்மானத்தை எடுத்திருந்தோம். 13 ஆவது திருத்;தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அங்கிருந்து தொடங்குவது என்று வலியுத்தியிருந்தோம்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இலக்கை முன்வைத்து, தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்வது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவும், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது என்ற மூன்று அம்ச நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு, எமது அரசியல் பயணத்தை நெறிப்படுத்திக் கொண்டோம்.

அழிவு யுத்த காலத்தில் நாம் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டதையும் எமது அரசியல் நிலைப்பாட்டையும் எள்ளிநகையாடிய இதர தமிழ் இயக்க கட்சிகள், இன்று நீண்ட காலம் கடந்து எமது நிலைப்பாட்டிற்கே வந்திருக்கின்றன. இதனை நான் வரவேற்கிறேன். ஆனால், இதில் இந்த தமிழ்க் கட்சிகளது எண்ணங்களும், சிந்தனைகளும் உண்மைத் தன்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று, அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வாருங்கள். மாறாக, நாளாந்தம் வாராந்தம் மாதாந்தம் என்று புதுப்புதுப் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை கொதிநிலை பிரச்சினை ஆக்காதீர்கள். எந்தப் பிரச்சினைக்கும் கூச்சல் இடுவது தேர்தல் அரசியலேயன்றி தீர்விற்கான வழியல்ல.

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது, ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எமக்குண்டு பிரச்சினைகளை தீராத பிரச்சினைகளாக்கி அதனையே தொடர்வதை விட்டு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதர தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும் என்பதே எனது நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.

இன்றைய நிலையில் எமது ஜனாதிபதி மேன்மைதங்கிய ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களும், செயற்பாடுகளும் எமது மக்களது பிரச்சினைகள் தொடர்பில் வெகு சாதகமாகவே முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளும் கிட்டத்தட்ட அந்த நிலைப்பாட்டினை ஏற்றுவருகின்றன. இந்த வாய்ப்பினை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது அபிலாசையாகும். – எனவும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.