நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயற்படல்வேண்டும் சம்பிக்க அறிவுரை
நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வேண்டும், 225 உறுப்பினர்களை விரட்டியடிக்க வேண்டும் என இளைஞர்கள் குறிப்பிடுவதை நியாயப்படுத்தும் வகையில் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள்.
நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன், கடுமையாக செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானித்துள்ளார்கள். தேர்தல் ஒன்று இடம்பெற்றால் தக்க பதிலடி கொடுப்பார்கள். நாட்டு மக்களும் அரசியல் ரீதியில் இனிவரும் காலங்களில் மாறுப்பட்ட தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வேண்டும், 225 உறுப்பினர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு கடந்த ஆண்டு தோற்றம் பெற்றது. இளைஞர்கள் மத்தியில் இந்த நிலைப்பாடு காணப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள தவறான நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறுக்கத்தக்க வகையில் செயற்படுகிறார்கள்.
முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க ஒருசில நேரங்களில் கடுமையான தீர்மானங்களை எடுத்தார். ஆளும் மற்றும் எதிர்தரப்பு என்று பாரபட்சமில்லாமல் நடுநிலையாக செயற்பட்டார். ஆகவே தற்போதைய நாடாளுமன்றம் குறித்து மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது, ஆகவே சபாநாயகர் கடுமையாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை