மட்டக்களப்பில் வெளிநாட்டு மோகத்தினால் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிர்க்கதி! சாணக்கியனிடம் அவர்கள் அடைக்கலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தால் பணத்தை இழந்துள்ளனர் எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சுமார் 8 கோடி ரூபாவை போலி முகவர்களின் ஆசைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான எம்மை காப்பாற்றுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு வந்திருந்த குறித்த பணத்தை இழந்தவர்கள், சுமார் பல மணித்தியாலங்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து தத்தமது பிரச்சினைகளை முன்வைத்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட   நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது கருத்தில் குறிப்பிட்டவை வருமாறு –

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என கூறி  185 பேரிடம்  8 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி  அரச உத்தியோகத்தில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு உடந்தையாக பாடசாலை மாணவன் ஒருவரும் உள்ளடங்குகிறார் என அறிகின்றேன். தற்போது இவ்விடயம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கலந்துரையாடினேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் என்னை இதற்கான உரிய நீதியைப் பெற்றுத் தரும்படி எனது அலுவலகத்தில்  சந்தித்திருந்தார்கள். தற்பொழுது இவ்வாறான மோசடிகள் அதிகளவாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும் எனத் தெரிவித்தார்.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் 188 பேரை தேர்ந்தெடுத்திருந்தார்கள். இதில் டுபாய்க்கு 146 பேரும் டென்மார்க்கிற்கு  20 பேரும்,  தாய்லாந்துக்கு 22 பேரும் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

அத்துடன், டுபாய்  நாட்டிற்கு செல்பவர்களிடம் 350,000 ரூபாவும் டென்மார் நாட்டிற்கு செல்பவர்களிடம் 550,000 ரூபாவும் தாய்லாந்து நாட்டிற்கு செல்பவர்களிடம் 4 முதல் 5 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர்.மொத்தமாக 188 பேரிடம் அண்ணளவாக 7 அரை கோடி ரூபாவை மோசடி செய்துள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்