முரணான கருத்து தெரிவித்தால் தேரரும் கைது செய்யப்படலாம்? ஆளுநர் செந்தில் எச்சரிக்கை

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படமாட்டா.

மகாவலி வேலைத்திட்டத்திற்காக கிழக்கின் கோரளைப்பற்று பகுதியிலிருந்து தமிழர்களும், நாவலடி பகுதியிலிருந்து முஸ்லிம்களும் அகற்றப்பட்டிருந்த நிலையில் இந்த பணிகள் இன, மத அடிப்படையில் அல்லாது சட்டரீதியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கிராம சேவகர்களிடத்திலிருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே காணிகளைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக சிங்கள மக்களின் குடியிருப்புகள் மற்றும் அங்கிருந்து அகற்றப்படுகின்றது என்ற வகையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகளும் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதனால் மேற்படி முன்னெடுப்புகளின் போது சகல இனத்தவர்களுக்கும் இலங்கையர் என்ற வகையிலேயே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, அதுகுறித்து அநாவசியமாக கருத்துக்களை வெளிப்படுத்த மூன்றாம் தரப்பினர் முற்படக் கூடாது. – என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.