‘காலநிலைக்கு உகந்த விவசாயத் துறை’ அபிவிருத்தி குறித்து ஆராய உலக வங்கி பிரதிநிதிகள் களப்பயணம்

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே மற்றும் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட குழுவினர்  திறப்பனையில் உள்ள காலநிலைக்கு உகந்த விவசாயப்  பயிற்சிப் பாடசாலைக்கு களப்பயணமொன்றை மேற்கொண்டனர்.

காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின்     முன்னேற்றத்தை ஆராய்வதே  இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது,உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.  இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற, நிலையான விவசாயத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி கோரியிருந்த நிலையில், அது தொடர்பில் ஆராய உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே முதன்முறையாக இலங்கை வருகை தந்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தின்  திறப்பனை, மான்னக்குளம் கிராமத்தில் ‘காலநிலைக்கு உகந்த  விவசாயப் பயிற்சிப்  பாடசாலை’ என்ற பெயரில் விவசாயப் பயிற்சிப் பாடசாலையொன்றை  அமைப்பதற்கு காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த  விவசாயப்  பயிற்சிப்  பாடசாலை  விவசாயிகளுக்கு காலநிலைக்கு உகந்த  விவசாய நடைமுறைகள் மற்றும் அதிநவீன விவசாய தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தை வழங்கும்.

உலக வங்கியின்  செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே  மற்றும் தெற்காசியாவுக்கான உலக வங்கியின் பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைசர் ஆகியோரின் பங்களிப்புடன் காலநிலைக்கு  உகந்த  நீர்ப்பாசன விவசாயம் தொடர்பில் பயிற்சிப் பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உலக வங்கியின் உதவியுடன் விவசாய அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட ராஜாங்கனை புளி வாழை செய்கைத் திட்டத்தையும் தூதுக்குழுவினர் பார்வையிட்டனர்.

இந்தத் திட்டம் அந்தந்தப் பகுதிகளிலுள்ள சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் விவசாயக் குடும்பங்களின் வருமானத்தை குறிப்பிட்டளவு மேம்படுத்த உதவியதுடன் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே –

பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளுக்கு காலநிலை மாற்றம் மற்றும் நவீன விவசாயத்தை மையமாகக் கொண்ட பயிற்சிக் கல்லூரியின் முக்கியத்துவத்தையும், அந்த அறிவை விவசாயிகளுக்கு வழங்குவதன் நன்மைகளையும் சுட்டிக்காட்டினார்.

சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களுக்கான அணுகல், டீசல் மீதான அதிகப்படியான சார்பைக் குறைத்தல் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல் மற்றும் உயர் கல்வி உள்ளிட்ட கல்விக்கான பிரவேச வாய்ப்பைப் பிள்ளைகளுக்கு வழங்குதல், பன்முகப்படுத்தப்பட்ட நிலைபேறான பயிர் விளைச்சல், சிறந்த ஊட்டச்சத்தை உறுதி செய்தல் இதன் முக்கிய நன்மைகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவளிக்க முடிந்தமையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அனா பியர்டே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களைக் குறைக்க இதுபோன்ற திட்டங்களின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, எவ்வாறு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பணிப்பாளர் டகபுமி கடோனோ, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா, சர்வதேச அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனத்தின் பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கிப் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்-ஜெர்வோஸ், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமை நிறுவனம், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகாமை நிறுவனம், யுனைடெட் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.