வட,கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்துவரும் காணி அபகரிப்புக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது சிவில் சமூகம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களின் காணிகள் அபகரிக்கப்படல், மிகையான இராணுவமயமாக்கல், தமிழர்களின் காணிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தொல்பொருள் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்படல், பௌத்த பிக்குகள் இவற்றுக்கு ஆதரவாக செயற்படல் என்பன பற்றி கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உண்மை நிலைவரம் இவ்வாறாக இருக்கின்றபோது தேசிய ரீதியில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் ரீதியான தன்முனைப்பின்றி அதனைப்பற்றி அரசாங்கம் வெறுமனே வாய் வார்த்தை வடிவில் பேசுவதால் எவ்வித பயனும் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பை விரிவுபடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்தது.

இக்குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பின்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹெய்டி ஹோற்றாலா, போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிஸ்லோ க்ரஸ்நோட் ஸ்கி, ஜேர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தும் கார்ஸ்றென் லுகே மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அவுஸ்ரா மோல்டெய்கினி ஆகிய நால்வரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக மட்ட அதிகாரிகள் இருவரும் என மொத்தமாக அறுவர் உள்ளடங்குகின்றனர்.

இக்குழுவினருக்கும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதை முன்னிறுத்தி கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சார்பில் கலாநிதி ஜெஹான் பெரேரா, சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், சட்டத்தரணி பவானி பொன்சேகா, நதீஷானி பெரேரா, ஷ்ரீன் ஸரூர் மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கள், நீதிபதிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், தேர்தல்களை நடத்துவதில் தொடரும் காலதாமதம், இன்னமும் முடிவுக்குக்கொண்டுவரப்படாத ஊழல் மோசடிகள், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அடக்குமுறைச் சட்டங்கள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தனர்.

அவற்றை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கை தொடர்பில் தயாரித்து வெளியிடப்பட்ட ஆட்சியியல் ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என வினவியதுடன், அவை அமுல்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

அதேபோன்று, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயன்முறை எந்த மட்டத்தில் உள்ளது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சிவில் சமூகப்பிரதிநிதிகள், இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாகவும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதாகவும் அரசாங்கம் வெறுமனே வாய் வார்த்தையாகக் கூறிவந்தாலும், அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினர். குறிப்பாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றவற்றை நிறுவுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்ற போதிலும், அவை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக சகல தரப்பினருடனும் கலந்துரையாடப்படவில்லை எனவும், அப்பொறிமுறைகளைத் தாம் அங்கீகரிக்கவில்லை எனவும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் பற்றி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் விளக்கிக்கூறிய சிவில் சமூகப்பிரதிநிதிகள், அப்பகுதிகளில் சிங்களவர்கள் சட்டவிரோதமாகக் குடியேற்றப்படல், பண்ணையாளர்களின் விலங்குகள் கொல்லப்படல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களின் காணிகள் அபகரிக்கப்படல், மிகையான இராணுவமயமாக்கல், தமிழர்களின் காணிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தொல்பொருள் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்படல், பௌத்த பிக்குகள் இவற்றுக்கு ஆதரவாக செயற்படல் என்பன பற்றிய தமது கரிசனைகளையும் வெளிப்படுத்தினர்.
எனவே உண்மை நிலைவரம் இவ்வாறானதாக இருக்கின்றபோது நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கான அரசியல் ரீதியான தன்முனைப்பின்றி அரசாங்கம் அதனைப் பற்றிப் பேசுவதால் எவ்வித பயனும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதேவேளை, தேர்தல்களை நடத்துவதில் நிலவும் காலதாமதம் பற்றி பிரஸ்தாபித்த சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகக் கூறும் அரசாங்கம், அதன் முக்கிய அங்கமான தேர்தல்களை நடத்துவதில் அக்கறை காண்பிக்கமால் இருப்பதாக விசனம் வெளியிட்டனர்.

அத்தோடு நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் உள்ளிட்ட புதிய அடக்குமுறைச் சட்டமூலங்கள், நாட்டில் இடம்பெற்றுவரும் ஊழல் மோசடிகள், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், முறையற்ற விதத்திலான தொழிலாளர் சட்டங்கள், மலையக மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இன்னமும் நிவர்த்திசெய்யப்படாமை என்பன பற்றியும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அதேபோன்று, இந்தச் சந்திப்பில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், 2027 ஆம் ஆண்டுவரை இலங்கைக்கு வழங்கப்படும் அச்சலுகை, அதன் பின்னரேயே மீண்டும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்