பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவையை மீறுவோரின் உறுப்புரிமை இரத்து – அதற்கு ஏதுவான சட்டமூலம் தயார் – நீதியமைச்சர் விஜயதாஸ

பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய ஒழுக்கக்கோவை தயாரிக்கப்படும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை இரத்துச்செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

பிரதமரும் நானும் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரத்யேக ஒழுக்கக்கோவை தயாரிக்கப்பட்டு, அவர்கள் அதற்கமைவாக செயற்படவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுத்தப்படும்.

அண்மையகாலங்களில் நாட்டுமக்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல், ஊழல் மோசடிகளில் ஈடுபடல், அரச சேவை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அநாவசிய தலையீடுகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தமது பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். இந்த நிலை தொடருமேயானால், கடந்த வருடத்தைப்போன்று நாடு மீண்டும் மிகமோசமான வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும்.

எனவே வெறுமனே கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்துப் பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதற்காகவே நாம் இந்த யோசனையை முன்வைத்தோம்.

குறிப்பாக கடந்த காலங்களில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம், புதிய மத்திய வங்கிச் சட்டம், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம், ஊழல் ஒழிப்பு சட்டம் போன்றவற்றின் ஊடாக நாட்டில் கட்டமைப்பு ரீதியில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

அதன் நீட்சியாகவே தற்போது பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரத்யேமாக ஒழுக்கக்கோவை ஒன்றைத் தயாரித்து, அதன்பிரகாரம் அவர்கள் செயற்படவேண்டியது கட்டயமாக்கப்படும். அதுமாத்திரமன்றி இச்சட்டமூலத்தின்கீழ் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும். எனவே மேற்குறிப்பிட்ட ஒழுக்கக்கோவையை மீறி செயற்படுகின்ற மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அக்குழுவிடம் முறைப்பாடளிக்கமுடியும்.

அம்முறைப்பாடுகள் தொடர்பில் குறித்த குழு விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படவேண்டிய தண்டனையைத் தீர்மானிக்கும். உச்சபட்சமாக குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உறுப்புரிமையை நீக்குவதற்கான அதிகாரமும் அக்குழுவுக்கு வழங்கப்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்