வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் முயற்சி! ஆஷு மாரசிங்க கூறுகிறார்

நாட்டின் பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்துகொண்டு மக்களுக்கு வரவு –  செலவுத் திட்டம் ஊடாக முடியுமான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி முயற்சித்து வருகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவி்த்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் மேற்கொள்வார் என்ற விடயத்தை அறிந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகக் கருத முயற்சிக்கினறனர்.

ஆனால் நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் கஷ்ட நிலைமை ஜனாதிபதிக்குத் தெரியும். அதேபோன்று நாட்டைக் கொண்டு செல்ல வேண்டிய வழியும்  ஜனாதிபதிக்குத் தெரியும். இந்த அனைத்து விடயங்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டு முடியுமானளவு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கே ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

அத்துடன் இந்த விடயங்களைச் செய்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய வரி வருமானங்களை சேர்த்துக்கொள்வதை முறையாக மேற்கொள்வது அவசியமாகும். அதனை முறையாக மேற்கொள்ள அரசாங்கம் பல விசேட வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது.

நாட்டின் வருமானங்களை ஒன்றுசேர்ப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தில் விசேட குழுவொன்றை அமைத்திருக்கிறது. அதேபோன்று நாடாளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழு ஊடாக நாட்டின் வருமானங்களைச் சேர்க்கும் வேலைத்திட்டம் செயற்பட்டு வருகிறது. நிதிக்குழுவிலும் இதுதொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

மேலும் 2017 இல் நாங்கள் 3 ரில்லியன் வருமானம் பெற்றுக்கொண்டோம். அதனால் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் எமக்குத் தேவையான வருமானங்களை ஏற்படுத்திக்கொள்ள முடியுமாகி இருக்கிறது. நாட்டின் வரி வருமானங்கள் மற்றும் வேறு வருமானங்களை சேர்க்கும் 40 நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் தொடர்பாக நாங்கள் முறையாக ஆராய்ந்து பார்த்துள்ளோம்.

அதனால் நாட்டுக்கு வரவேண்டிய வரி வருமானங்கள் மறறும் ஏனைய வருமானங்களை நாங்கள் முறையாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் வரி அதிகரிக்கும் தேவை ஏற்படாது. அதேநேரம் இந்த வரி வருமானங்கள் அனைத்தையும்  சேர்க்க முடியுமானால் எமக்கு 3 ரில்லியன் ரூபா வரை வருமானத்தை சேர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.

என்றாலும் சில அதிகாரிகள் வரி வருமானத்தைச் சேர்ப்பதற்குப் பதிலாக வரும் பணத்தை அவர்களின் பொக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இவ்வாறான அதிகாரிகள் தொடர்பில்  அறிந்தால் அது தொடர்பாக  தகவல் தெரிவிக்க ஆணைக்குழுவில் முறையிடலாம். அதனால் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால்  மாற்றத்தை எம்மில் ஆரம்பிக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.