சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டயஸுக்கு கொழும்பு நீதிவான்மன்றம் அழைப்பாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டோருக்கு எதிராகத்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் ஆஜராகுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கறுவாக்காடு பொலிஸாரால்  முன்வைக்கப்பட்ட  கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ்,  சாட்சியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை பெப்ரவரி 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.

இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பொலிஸ் அதிகாரிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரோஜர் செனவிரத்ன மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தைச் சுற்றி வீதிகளை மறித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக  குற்றஞ்சாட்டி கறுவாக்காடு பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்