வட, கிழக்குக்கு சென்ற இந்திய நிதியமைச்சர் மலையக பகுதிகளுக்கு எதற்காக வரவில்லை! வேலுகுமார் கேள்வி
அரச நிதி செலவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ‘நாம் 200’ என்ற நிகழ்வை நடத்தி மலையக மக்களை தரக்குறைவாக சித்திரித்துள்ளமைக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலையக மக்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்றார். மலையகத்துக்கு செல்லவில்லை. அரச அனுசரணையுடன் இ.தொ.க.அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. தொண்டமான் பரம்பரைக்கு முடியாததை நான் சாதித்துள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
மலையகம் 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை தேசிய நிகழ்வாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஓர் அரசியல் கட்சி தமது கட்சி கூட்டமாக அரச செலவுகளில் இந்த நிகழ்வை நிறைவு செய்தது. மலையக மக்கள் தமது அபிமானத்தை இழந்து அவமானம் படும் அளவுக்கு இந்த நிகழ்வின் பெறுபேறு தற்போது காணப்படுகிறது.
நாகபாம்பு படமெடுத்து ஆடுவதை பார்த்து நாக்கலி பூச்சி படமெடுத்து ஆட முற்பட்ட கதைக்கு இணையாகவே இந்த அரசியல் கட்சியின் செயற்பாடு காணப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்தார். அப்போது அவரை நாங்கள் மலையகத்துக்கு அழைத்து சென்று மலையகத்தை பெருமைப்படுத்தினோம். மலையகத்தின் பல பிரச்சினைகளை நேரடியாக எடுத்துரைத்து 10 ஆயிரம் வீடுகள் திட்டத்துக்கான உறுதியை பெற்றுக்கொண்டோம்.
மலையக மக்களின் 200 ஆண்டுகால நிறைவை பற்றிக் கூறும் அரசாங்கம் மலையக மக்களுக்கு என்ன செய்துள்ளது? சம்பளப்; பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை. அல்லது பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் மலையக மக்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டனவா அல்லது மலையகத்தின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா ஏதும் இல்லை. போலியான வாக்குறுதிகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன.
நாம் 200 என்ற வெற்று நிகழ்வை நாங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். நாம் 200 நிகழ்வில் சிறப்பு அதிதியாக இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அவர் கொழும்புக்கு வருகை தந்தார். கண்டிக்கு சென்றார். கிழக்கு மற்றும் வடக்குக்கு சென்றார். ஆனால் மலையகத்துக்கு செல்லவில்லை.ஆனால் மலையக மக்களைக் கௌரவிக்கும் நாம் 200 ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டார்.
மலையக மக்களுக்கும், இந்திய தேசத்தின் தமிழகத்துக்கும் இடையில் தொப்புள் கொடி உறவு காணப்படுகிறது. மலையக 200 நிகழ்வு தொடர்பில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தி நாம் 200 நிகழ்வில் ஒளிப்பரப்பப்படவில்லை. ஆகவே மலையக மக்களை கௌரவிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் நாடகம் மற்றும் அரசியல் கூத்தை அரங்கேற்றியுள்ளது.
2017 ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை இந்திய நிதியமைச்சர் மீண்டும் நினைவுப்படுத்திச் சென்றுள்ளார். மறுபுறம் 2000 ஆம் ஆண்டு முதல் பேசப்படும் 10 பேச்சர்ஸ் காணியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். இந்த நாடாளுமன்றத்தை மூன்று தொண்டமான்கள் பிரதிநிதித்து வப்படுத்தியுள்ளார்கள். இவர்களால் கடந்த 40 வருடகாலம் செய்ய முடியாததை நான் 2015 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் செய்து முடித்துள்ளேன்.
கண்டி மாவட்டத்தில் மலையக தோட்ட அபிவிருத்திக்கு சொந்தமான லிட்வெளி தோட்டத்தில் உள்ள சகல லயன் அறைகளையும் ஒதுக்கி 110 குடும்பங்களுக்கு 10 பேச்சரஸ் காணியை ஒதுக்கி அதற்கான உறுதிபத்திரத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். தொண்டமான் பரம்பரையில் உள்ளவர்களில் எவருக்காவது இதனை சாதிக்க முடியுமா? தோட்ட லயன் அறைகளை ஒதுக்கி காணி உறுதிப்பத்திரத்துடன் காணிகளை வழங்க முடியுமா? என்று தொண்டமான்களுக்கு சவால் விடுக்கிறேன். தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக நாம் 200 என்ற நிகழ்வை நடத்தி மலையக மக்களை தரக்குறைவாக நடத்தியதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். – என்றார்.(
கருத்துக்களேதுமில்லை