இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடியும்கூட அனுமதிக்கக்கூடாதாம்! அமைச்சர் டக்ளஸ் காட்டம்

கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. – என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேரா உரையாற்றும்போது எழுப்பிய கேள்விகளுக்குப்; பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நிரோஷன் பெரேரா எம். பி. குறிப்பிடுகையில் –

பிரதமர் இந்திய மீனவர்களுக்கு வடக்கு கடற்பரப்பில் அனுமதி வழங்குவது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக கூறினார். அண்மையில் ஜனாதிபதி இந்தியாவுக்கு சென்ற போது கச்சதீவையும் வடக்கு கடலையும் வழங்கிவிட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் வடக்கு கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடற்படையும் அமைச்சும் மிகவும் வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.? இன்று மீனவர்களுக்கு வாழ்வதற்கு வழியில்லை. இன்று வரை அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.? எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை? இது தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன? – என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் –

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பில் நானும் இணங்குகிறேன். நானும் அதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றேன்.  ஆனால் அது தொடர்பில் பிரதமரோ அல்லது வெளிவிவகார அமைச்சரோ அதனை ஏற்றுக் கொண்டு இந்தி ஊடகங்களுக்கு சொன்னதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. இந்திய இழுவைப் படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

அத்துடன் கச்சதீவு தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது.  இந்தியாவில் தேர்தல் நடப்பதால் ஏட்டிக்கு போட்டியாக அங்கு இது தொடர்பாக கருத்துக்கள் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 74 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கச்சதீவு உடன்படிக்கையால் நாம் 84 வீதமான வளங்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம்.

அத்துடன் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.