முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட முறைசாரா துறைகளில் பணியாற்றுவோரின் நலன் தொடர்பில் அமைச்சர் மனுஷ உடனடி நடவடிக்கை

முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு தொழில் கௌரவத்தை வழங்குவது மற்றும் அவர்களின் தொழில் ரீதியிலான நலன்கள் குறித்தும் நீண்ட காலமாக பேசப்பட்டபோதிலும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு வழிவகுக்கும் பொருட்டு “கரு சரு” திட்டம் (Garu Saru) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அத்தோடு, நாட்டில் பிரச்சினைகள் குறித்து பேசுபவர்கள் பலர் இருக்கின்றனர். தீர்வுக்கு எவரும் முன்வரவில்லை. விமர்சனங்கள் தீர்வாவதில்லை என்பதாலேயே நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி அனைவரையும் ஒன்றிணைத்தார். பிரச்சினைகளுக்கு பயந்து அவற்றை தீர்க்க முடியாது. இவ்வாறான நிலையில்தான் நீண்ட காலமாக இந்த முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பிலான விடயங்களுக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டத்தை எமது அமைச்சு மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் அவர், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய தொழில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கான  ஒழுங்குறுத்தலையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் கௌரவத்தை மேம்படுத்துவதற்கான ‘கரு சரு’ என்ற வேலைத்திட்டத்துக்கு பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கான தொடர் செயல் அமர்வின் முதலாவது அமர்வு நேற்று (08) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரின்  தொழில் கௌரவத்தையும், அவர்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தி ‘கரு சரு’ என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலமர்வில் அமைச்சர் மனுஷ மேலும் தெரிவிக்கையில்,

முச்சக்கரவண்டிகளை செலுத்துவோர் தனியார் பஸ் சாரதி, பஸ் நடத்துநர், ஏனைய பிரிவு போக்குவரத்து சாரதிகள், கட்டுமான பொறியியலாளர்கள், கட்டுமான பொறியியலாளர் உதவியாளர்கள், வீட்டுப் பணிப்பெண் சேவையில் ஈடுபட்டுள்ளோர், அலங்கார கலைஞர்கள், சுய தொழிலில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோரின் தொழில் கௌரவத்தையும், பாதுகாப்பையும், அவர்கள் தொழில் ரீதியாக வரவேற்கப்படுவதையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டில் இன்று 6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் முறைசாரா துறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

அரச மற்றும் தனியார் துறைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில் ரீதியிலான கௌரவம் அல்லது தொழில் அடிப்படையிலான எந்தவித ஒழுங்குறுத்தலும் இல்லை.

அரசாங்க ஊழியர்களுக்கென ஓய்வூதியம் உண்டு. தனியார் துறை ஊழியர்களுக்கு சேமலாப நிதி, ஊழியர் பாதுகாப்பு நிதி போன்ற நலன்கள் உள்ளன.

முச்சக்கரவண்டிகளை செலுத்துபவர்கள், நெசவாளர்கள், பெயிண்டர்கள், மின்சார வல்லுநர்கள் (electricians) உட்பட அனைத்து துறைகளிலும் உள்ளவர்கள் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனால், அவர்களின் தொழிலுக்கு மரியாதை இல்லை. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் முழு நாட்டிலும் உள்ள அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சரவை எனக்கு விசேட அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிலர் EPFஇல் கைவைக்க வேண்டாம் என்று கூச்சல் போடுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. தற்போது ஊழியர் சேமலாப நிதி (EPF) உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இரண்டு மற்றும் மூன்று மில்லியன் மக்கள் அங்கம் வகிக்கின்றனர்.

மேலதிகமாக, இந்த நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்குள் கொண்டு வருவதற்காக இந்தப் புதிய செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

வெளிநாடுகளிலுள்ள இவ்வாறான ஊழியர்கள் தொடர்பில் எங்களால் பேச முடியும் என்றாலும், நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் தொழில் கண்ணியம் தேவைப்படும் வேலைத்திட்டத்தை வழங்க எவரும் முன்வரவில்லை. இவர்களின் ஓய்வூதியத்துக்கும், ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான வேலைத்திட்டம் “கரு சரு” திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இந்த அமர்வில் தமது தொழில் ரீதியாக முச்சக்கரவண்டிகளை செலுத்துவோர் விடயத்தை எடுத்துக்கொண்டுள்ளோம். நீண்ட காலமாக இந்த விடயம் குறித்து பலர் பேசினார்கள். ஆனால், இன்னும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முச்சக்கரவண்டி சேவையானது இந்த நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மக்களை பிறப்பு முதல் இறப்பு வரை இணைக்கும் ஒரு தவிர்க்க முடியாத சேவையாகும்.

நாட்டில் முச்சக்கரவண்டிச் சேவையை பெறாத ஒருவரை கண்டுபிடிக்க முடியாது.

மேல் மாகாண சபை இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை நிறைவு செய்துள்ளதாக அறிகின்றோம். இதற்கான சட்டத்தில் திருத்தம் செய்ய போக்குவரத்து அமைச்சும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, முதற்கட்ட பணிகள் முடிவடைந்த பின், தொழில் ரீதியாக முச்சக்கரவண்டி ஓட்டுபவர்கள் யார் என்பதை கண்டறிய முடியும். இவர்களை பதிவு செய்த பின், தொழில்முறையான நிறுவனத்தை உருவாக்கி, அவர்களின் ஆலோசனைகளுடன் அவர்களுக்கு உரிய மரியாதையுடன் ஓய்வு பெறும்போது, தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்