வெளிநாடுகளுக்கான புதிய தூதுவர்கள், ஆணையாளர்கள் குழு வட மாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வட மாகாணத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தபோது வட மாகாண ஆளுநர் செயலகத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வட மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மாகாணத்தை அபிவிருத்தி செய்யவும் நீண்ட மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த ஆளுநர், அந்த வேலைத்திட்டங்களுள் வட மாகாணத்தில் 25,000 நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பது, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான திட்டங்களின் முன்னாயத்த வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், மக்களின் அன்றாட நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆளுநர் விளக்கமளித்தார்.

இந்த கலந்துரையாடலானது வட மாகாண மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் புதிய ஆணையாளர்களின் ஆதரவை பெறும் நோக்கிலேயே இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது, ஆளுநரின் தலைமையில் மாகாண மக்களுக்கு ஆற்றிவரும் சேவையை பாராட்டிய புதிய தூதுவர்கள், எதிர்காலத்தில் வடக்கின் அபிவிருத்திக்காக தாம் கடமை புரியும் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி பயணிகள் படகு சேவைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை, எதிர்காலத்தில் மன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகு சேவைத்திட்டங்கள், மீன்பிடி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார நடவடிக்கைகள் போன்றவை பற்றியும் வட மாகாணத்தின் வளங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் செய்யக்கூடிய சாதகமான, ஆக்கபூர்வமான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.

தற்போதைய ஆளுநரின் நியமனத்தின் பின்னர், வட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு மீண்டும் பாராட்டு தெரிவித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், வட மாகாண அபிவிருத்திக்கு அந்தந்த நாடுகளிடமிருந்து அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.