களுத்துறை றைகம தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல் : செந்தில் தொண்டமான் தலையிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

தீபாவளி நாட்களில் றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், உடனடியாக மேல் மாகாண ஆளுநர் மற்றும் மேல் மாகாண பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசென்று பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், பெரும்பான்மையின இளைஞர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்.

மேல்மாகாணம் களுத்துறை மாவட்டம் றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தீபாவளியை முன்னிட்டு நகர்பகுதி கடைகளுக்கு அல்லது தோட்டத்தை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதியில் வாழும் சில பெரும்பான்மையின இளைஞர்களின் தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளனர்.

பெரும்பான்மையின இளைஞர்களின் தாக்குதலில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்டவர்கள், இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடு  செய்தனர்.

இதுதொடர்பில் விரைந்து செயல்பட்ட செந்தில் தொண்டமான், மேல் மாகாண ஆளுநருக்கு அழைப்பை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் விவரித்துள்ளதுடன், இவ்வாறு தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் அது தமிழ், சிங்கள முறுகல்களுக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு நேரடியாக செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண ஆளுநர், கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துடன், மேல் மாகாண இ.தொ.கா பிரதிநிதிகளுக்கும், மேல் மாகாண ஆளுனருக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதன் பிரகாரம் இ.தொ.காவின் உபத் தலைவர்களான திருகேதிஸ், ராஜமணி பிரசாத் ஜீவானந்தம் மற்றும் ஜீவா மாகிரட் ஆகியோர் மேல்மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்து முறைப்பாட்டை கையளித்திருந்தனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மேல் மாகாண பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கொண்டுசென்றதுடன், சம்பவம் தொடர்பில் றைகம பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டியதுடன், உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு தீர்வவை பெற்றுக்கொடுக்க மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெரும்பான்மை இன இளைஞர்களை அழைத்து தமிழ் இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுப்பதை கண்டித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன், காயங்களுக்கு உள்ளாகியிருந்த தமிழ் இளைஞர்களுக்கு   மருத்துவ வசதிகளும்   பெற்றுக்கொடுக்கப்பட்டன.

அதேபோன்று றைகம பகுதியில் பொலிஸாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் உடனடியாக விரைந்து செயல்பட்ட ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு றைகம பகுதி தமிழ் இளைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.